நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் வீட்டில் விளக்கை எரிய விட்டு காதலனுடன் விடியும் வரை காத்திருந்த பெண் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் மேல ஆசாரிப்பள்ளம் பகுதியில் வசித்து வந்தவர் நீலாவதி. 42 வயதான நீலாவதி கணவரை பிரிந்து 19 வயது மகனுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் வியாழக்கிழமை கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
அவரது வீட்டில் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததால் நள்ளிரவில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் அவருடன் தங்கி இருந்த மகனை காணாததால் அவனை பிடித்து விசாரித்தால் இந்த சம்பவம் குறித்த உண்மை தெரியவரும் என்று காவல்துறையினர் கருதினர்.
இந்த நிலையில் நீலாவதியின் மகன் காவல்துறையினரிடம் சம்பவத்தின் போது தான் வீட்டில் இல்லை என்றும் தனது தந்தை மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதற்கிடையே போலீசாரை தேடி வந்த மரக்கடை அதிபரான நீலாவதியின் கணவர் ராம்தாஸ் மூலம் கொலைக்கான பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
வாலிப வயதில் மகன் இருக்கும் நிலையில் நீலாவதி அந்த பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழகி வந்ததை நேரில் பார்த்த ராம்தாஸ், கண்டித்ததால், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நீலாவதி அவரை பிரிந்து சென்று விட்டதாகவும் அவர்களுக்குள் விவாகரத்து ஏதும் செய்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.
தந்தை தன் மீது சந்தேகப்பட்டு அடித்து உதைப்பதாக கூறி மகனை தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளார் நீலாவதி. இருந்தாலும் மகன் ராம்தாஸிடம் தொடர்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை ராம்தாஸ் தனது மரக்கடைக்கு புறப்பட்டுள்ளார். தனது மனைவி தங்கி இருந்த வீட்டின் வழியாக சென்றபோது அந்த வீட்டின் படுக்கை அறையில் மின் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது மனைவி நீலாவதியுடன் தான் ஏற்கனவே பார்த்த இளைஞர் இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்து அவர்களை தாக்கி உள்ளார்.
இதில் அந்த இளைஞர் அங்கிருந்து ஓடிவிட, சொல் பேச்சு கேளாத மனைவி நீலாவதியை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு ராம்தாஸ் அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும், இந்த கொலை தொடர்பாக போலீசார் தனது மகனை தேடுவதை அறிந்து, தாமாக முன்வந்து போலீசார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கைப்பற்றப்பட்டது.
தன்னை மனைவி ஏமாற்றினாலும் நம்பிய மகன் மீது கொலைப்பழி விழுந்துவிடக்கூடாது என்று காவல் நிலையத்தில் தந்தை சரண்டைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.