திண்டிவனம் அருகே காதல் மனைவி வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் உயிரோடு தீவைத்து எரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. லாக் டவுன் காதல் திருமணத்தால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
விழுப்புரத்தை அடுத்த வானூர் பரங்கனியைச் சேர்ந்த ஜீவா என்ற 21 வயது இளைஞர், நைனார்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரைக் காதலித்து வந்தார்.
ஊரடங்கில் காதலியைக் காணாமல் தவித்த ஜீவா, ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி ராஜேஸ்வரியைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 3ந்தேதி ராஜேஸ்வரி தீக்குளித்ததாகக் கூறி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பெண் வீட்டாரிடம், ராஜேஸ்வரி மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றதாகவும், தான் காப்பாற்றியதாகவும் கணவர் ஜீவா தெரிவித்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய ராஜேஸ்வரி அளித்த வாக்குமூலத்தால் வரதட்சணை கேட்டு நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது.
காதலித்து திருமணம் செய்து கொண்டதால், பெண் வீட்டார் வரதட்சணை எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. முறையான வேலையின்றித் தவித்து வந்த ஜீவா, தனது காதல் மனைவியிடம் வரதட்சணையாக நகை கேட்டு வாங்கி வரச்சொல்லி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி இரவு கணவன்- மனைவிக்குள் வரதட்சணை தொடர்பாக மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காதல் கணவர் ஜீவா, மனைவி ராஜேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வீட்டில் சொன்னால் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனை கொன்று விடுவேன் என்று காதல் கணவர் ஜீவா மிரட்டியதாக ராஜேஸ்வரி தெரிவித்த வாக்குமூல வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது.
வீடியோவை ஆதாரமாகக் கொண்டு மனைவியை உயிரோடு தீவைத்து எரித்த, கொடூரக் கணவன் ஜீவாவை வானூர் போலீசார் கைது செய்தனர். ஆபத்தான நிலையில் உள்ள ராஜேஸ்வரிக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
கண்டதும் காதல், கொண்டது மோகம் என்று காதலனின் பின்புலம் அறியாமல் காதலனை நம்பி வீட்டை விட்டுச்செல்லும் பெண்களுக்கு இந்த கொடூரச் சம்பவம் ஒரு எச்சரிக்கைப் பாடம்.