தமிழ் சினிமாவான பில்லா பட பாணியில் போதை பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு இலங்கையை கலக்கி வந்த சிங்கள தாதா அங்கடா லொக்கா ஆள்மாறாட்டம் செய்து கோயம்புத்தூரில் மறைந்திருந்த போது கொல்லப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் 7 தனிப்படை அமைத்துள்ளனர்...
தமிழில் அஜீத் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தில் வரும் பல திடுக்கிடும் காட்சிகளை இலங்கையில் நிஜத்தில் நிகழ்த்திக் காட்டிய போதை பொருள் கடத்தல் மன்னன் மத்துகமே லசந்தா சந்தன பெரேரோ என்கிற அங்கட லொக்கா..
கடந்த ஜூலை மாதம் 4 ந்தேதி கோவை பீளமேடு அடுத்த காளப்பட்டி பாலாஜி நகரில் சாதாரண வீட்டில் வசித்து வந்த பிரதீப் சிங் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி என்பவர் அளித்த புகாரின் பேரில் உடலை பிணகூறாய்வு செய்து கோவை போலீசார் ஒப்படைத்துள்ளனர். அவரது சடலத்தை மதுரைக்கு எடுத்துச்சென்று எரித்து விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இலங்கையில் உள்ள தொலைக்காட்சிகளில் கடத்தல் தாதா அங்கட லொக்கா தமிழகத்தில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு விட்டதாக செய்தி வெளியானதால், இதுதொடர்பாக கோவை போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்...
அதில் பிரதீப் சிங் என்ற போலியான பெயரில் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து கோவை காளப்பட்டியில் தங்கி இருந்தது சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கட லொக்கா என்பதையும், போலியான ஆவணங்களை கொடுத்து சடலத்தை சாதுர்யமாக பெற்றுச்சென்று எரித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காதலி அமானி தான்ஜி, வழக்கரிஞர் சிவகாமி சுந்தரி, போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்த தியானேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர்கள், கத்தார் தினார், லேப்டாப், மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டது.
இவர்களில் அமானி தான்ஜி உடல் நலக்குறைவு என மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை தமிழக சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. தாதா அங்கட லொக்கா வசித்து வந்த வீட்டை சிபிசிஐடி காவல்துறையினர் சோதனையிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் அவன் தங்கி இருந்த வீடு அமெரிக்காவில் உள்ள வழக்கறிஞருக்கு சொந்தமானது என்றும் தியானேசுவரன் பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
துபாயில் 3 வருடத்திற்கு முன்பு அமானி தான்ஜியை சந்தித்த அங்கட லொக்க, அவள் மீதுள்ள ஆசையில் அவளது காதலனை கொலை செய்துவிட்டு, அமானி தான்ஜியை அபகரித்துக் கொண்டதாகவும், அதற்கு பழிக்கு பழியாக அமானி தான்ஜி உடன் பழகி இந்த சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது .
சிங்களா தாதா கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் அவன் இந்தியாவிற்குள் வந்தது எப்படி? அவனுக்கு உதவிய நபர்கள் யார்? கையூட்டு பெற்றுக் கொண்டு போலி ஆவணத்தை சரி பார்க்க தவறியவர்கள் யார்? என அனைவரிடமும் விரிவான விசாரணை நடத்த 7 தனிப்படைகளை அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஒரு குழு வழக்கறிஞர் வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றது.
ஸ்ரீலங்காவின் கொழும்புவில் நிழல் உலக தாதாவாக கருதப்படும் அங்கட லொக்கா மீது குறுகிய காலத்தில் போதை பொருள் கடத்தல், கள்ளதுப்பாக்கி விற்பனை,வாள்வெட்டுக் கூலிப்படை அட்டகாசம், அயல் நாட்டு கள்ள நோட்டு பறிமாற்றம், பெண்கள் கடத்தல், பலாத்கார வழக்கு என 100க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததால், 2014 ஆம் ஆண்டு ராஜபக்சே ஆட்சியின் போது கடுமையான நெருக்கடியால் இலங்கையில் இருந்து விரட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
கள்ளத்தோணி மூலம் தமிழகத்திற்குள் நுழைந்து போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் கூட்டாளிகளுடன் துபாய்க்கு தப்பிச்சென்று அங்கிருந்த படியே கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்துள்ளான் அங்கட லொக்கா.
2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் துபாயில் ஏற்பட்ட நெருக்கடியால் கோவைக்கு பிரதீப் சிங் என்ற போலியான பாஸ்போர்ட்டில் தனது காதலியான அமானி தான்ஜியுடன் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக கூறப்படுகின்றது.
இந்த அங்கட லொக்கா, சில ஆண்டுகளுக்கு முன்பு பில்லா படத்தில் வருவது போல ஒரு முறை காவல்துறை வாகனத்தை ஆதரவாளர்களுடன் மறித்து ஏ.கே 47 துப்பாக்கியால் சுட்டு 2 கைதிகளை படுகொலை செய்தவன் என்கின்றனர் கொழும்பு காவல்துறையினர்...
அதே போல பெரிய அளவிலான கழுகுகளை போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தியுள்ளான் அங்கட லொக்கா என கூறும் காவல்துறையினர். ஒரு முறை கொழும்பு சிறைக்குள் இருக்கும் தனது கூட்டாளிக்காக கால் கிலோ எடையுள்ள ஹெராயின் போதை பொருளையும், இரு செல்போன்களையும் ஜிபிஎஸ் பொருத்தி கருப்பு டேப்பால் கழுகின் கால்களில் சுற்றி அனுப்பிய போது போலீசாரிடம் கழுகு சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
ஒருமுறை பூனையின் கழுத்தில் போதை மாத்திரை குப்பிகளை கட்டி ஜெயிலுக்குள் அனுப்பி வைத்த போது அந்த பூனையை போலீசார் மடக்கியுள்ளனர்.
இலங்கையில் ராஜபக்சேவையே பதற வைத்த தாதா அங்கட லொக்கா மரணத்தின் பின்னணியும், அவனுடைய தமிழக கூட்டாளி யார் ? என்பதும் சிபிசிஐடி காவல்துறையினரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் இலங்கையில் போதை பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பல் தலைவனான அங்கொடா லொக்கா கோவையில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், உயிரிழந்தது அங்கொடா லொக்கா தானா என்பதை உறுதி செய்ய டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் அங்கோட லொக்காவின் பணவர்த்தனை மற்றும் தொடர்புகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 தனிப்படைகள் அமைத்து கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கொடா லொக்காவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மருந்துகள், புரோட்டீன் பவுடர் ஆகியவற்றை கொண்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.