சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 100 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், திருமணமான ஒருவருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில், சாப்ட்வேர் என்ஜினியர் கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா. எம்பிஏ பட்டதாரியான இவருக்கும் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வரும் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் மேட்ரிமோனி மூலமாக பெண்பார்த்து கடந்த 2019 ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது...
திருமணமான இரண்டு மாதங்களிலேயே பிரச்சனை எழுந்ததால், பிரியங்கா தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் பிரியங்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் திருமணத்தின் போது 140 சவரன் பெண்ணுக்கு நகை போடுவதாகச் சொல்லி, பெண் வீட்டார் 40 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும், இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பிரியங்காவின் தாய்,தந்தையர் அடிக்கடி நிரேஷ் குமாரிடம் மீதி நகையை போட்டு விடுவதாக சொல்லி சமாதானம் செய்ய முயற்சி செய்து வந்ததாகவும், ஆனால் நிரேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்த நகையையும் போட வேண்டும் என வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பிரியங்கா தனது அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் நிரேஷ் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்றது.
ஆர்.டி.ஓ விசாரணையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தது உண்மையானதால், சாப்ட்வேர் என்ஜினியர் நிரேஷ் குமார் மீது வரதட்சணை கொடுமையால் மரணம் விளைவித்தல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். எழும்பூர் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.