முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாகக் கூறப்படும் நபரையும் அவரது மகனையும் கோவையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் இருக்கும் வீடியோ, புகைப்படங்களை காட்டி முதலீட்டாளர்களை நம்ப வைத்து ஏமாற்றிய நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை ,ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கிரீன் கிரஸ்ட் இன்வஸ்ட்மெண்ட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட மணிகண்டன் பாலகிருஷ்ணன் என்ற நபரும் அவரது மகன் சஞ்சய்குமாரும் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் நூற்றுக்கு 0.5% வட்டி தருவதாகவும், முதலீடு செய்ய ஆள் சேர்த்துக் கொடுத்தால் ஊக்கத் தொகை அளிப்பதாகவும் முதலீட்டாளர்களுக்கு ஆசை காட்டியுள்ளனர்.
தன் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வரவைக்க, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் தாம் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை மணிகண்டன் பாலகிருஷ்ணன் விளம்பரங்களில் பயன்படுத்தியுள்ளார்.
இவர்களின் கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி விட்டில் பூச்சிகள் போல் ஏராளமானோர் 50 ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை கிரீன் கிரஸ்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆரம்பத்தில் சில மாதங்கள் வங்கிக் கணக்கில் வட்டித் தொகை செலுத்தப்பட்டு வந்ததாகவும் அதன் பின்னர் கடந்த ஓராண்டாக பணம் செலுத்தப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். பணம் குறித்து கேட்கச் சென்றால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
60 கோடி ரூபாய் அளவுக்கான மோசடி மட்டுமே தற்போது வெளியே தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் தங்களைப் போன்றே தமிழகம் முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவர்களிடம் பணம் செலுத்தி ஏமாந்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
மோசடி குறித்தான புகாரின் பேரில் மணிகண்டன் பாலகிருஷ்ணனையும் அவரது மகன் சஞ்சய்குமாரையும் கைது செய்த போலீசார், 3 பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மோசடிக்கு துணை போனதாக மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா, சீனிவாசன், கார்த்திகேயன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
பகட்டான, கவர்ச்சியான விளம்பரங்கள், பிரபலங்களோடு நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பார்த்து ஏமாறும் போக்கு இன்னும் புழக்கத்தில் இருப்பது வேதனையளிப்பதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், நிதி நிறுவனங்களின் பின்னணிகளை தீர ஆய்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.