சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு உடலில் ஏதாவது ஒரு இடத்தில் வலி என்று கூறி மருத்துவர்களைக் குழப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் அடித்து கொலை செய்ததாக இரு கொலை வழக்குகளில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணையை சிபிஐ அதிகாரிகள் முடித்துள்ள நிலையில் வழக்கின் விசாரணையை தொடங்கிய நாள் முதல் தினமும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று வித விதமான நாடகங்களை நடத்தி வந்தது மருத்துவர்கள் ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
ஆரம்பத்தில் காலில் வலி, கழுத்தில் வலி என வித விதமாக சீன் போட்ட ஸ்ரீதர், கடந்த வாரம் தனக்கு கடுமையான முதுகு தண்டு வலி ஏற்பட்டதாக கூறியதால் அவரை மருத்துவமனையில் சேர்த்து எக்ஸ்ரே, ஸ்கேன் என பல கட்ட சோதனை நடத்தியதில் அவருக்கு முதுகு தண்டில் எந்த விதபாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இருந்தாலும் சில தினங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சாக்கில் உறவினர்களை சந்தித்து வந்தார். அவரை அங்கிருந்து மீண்டும் சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தனக்கு கையில் தீராத வலி இருப்பதாக கூறி புதிய நாடகம் நடத்தி உள்ளார் ஸ்ரீதர்.
இதனால் கைவலி தீரும் வரை அவரை மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்க்கிடையே சிறையில் இருந்த ஒவ்வொரு நாளும் அவரை பார்க்க வழக்கறிஞரும், அவரது மனைவியும் வந்து சென்றதாக சிறைத்துறை பதிவேடுகள் சொல்கின்றது. சாதாரண கைதிகளுக்கு இந்த அளவுக்கு சிறையில் சலுகைகள் கிடைக்குமா என்பது சந்தேகமே என்று கூறும் வழக்கறிஞர்கள், ஸ்ரீதருக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளின் பின்னணியில் அரசியல் பிரமுகர் ஒருவரின் தலையீடு இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
வலியே இல்லாமல் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை என்ற பெயரில் ஓய்வு எடுத்து வரும் ஸ்ரீதரை சக காவலர்கள் வலிதர் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்று வலியால் துடிக்கும் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கவே சிறை வளாகத்தில் மருத்துவமனை உள்ள நிலையில் ஸ்ரீதரை மட்டும் வெளியில் அழைத்து செல்வதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது என்கின்றனர் வழக்கறிஞர்கள்.