நான் அவன் இல்லை திரைப்படத்தின் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த மோசடிப் பேர்வழியை போலிசார் கைது செய்துள்ளனர். பொறியில் சிக்கிய பொறியாளன் குறித்த செய்தித் தொகுப்பு.
தற்போது சென்னையில் அதுபோன்ற ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. மேட்ரிமோனி இணையதளம் மூலம் திருமணமாகாத பெண்களை தொடர்பு கொண்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த ராகேஷ் சர்மா இவன்தான்.
திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த பிஇ பட்டதாரியான ராகேஷ் ஷர்மா, மேட்ரிமோனி இணையதளம் மூலம் கொடுங்கையூரில் வசிக்கும் இளம் பெண்ணிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளான்.
அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் 20 சவரன் தங்க நகைகளையும் வாங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பெண்ணிடம் பணம் கேட்கவே, ராகேஷ் ஷர்மாவின் நட்பில் சந்தேகம் அடைந்த அந்தப்பெண் தனது தந்தையிடம் நடந்த விபரத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கொடுங்கையூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையிலும் குறிப்பிட்ட பெண்ணை போனில் மீண்டும் தொடர்பு கொண்ட ராகேஷ் ஷர்மா, மேலும் 2000 ரூபாய் கேட்டுள்ளான்.
இதையடுத்து மாதவரம் ரவுண்டானா அருகே வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு வரன் பார்த்த பெண் மூலம் வலை விரித்தனர் காவல்துறையினர். பணம் கிடைக்கும் ஆசையில் ரவுண்டான வந்த ராகேஷை ரவுண்டு கட்டி பிடித்தனர் போலீசார்.
தொடர்ந்து தங்கள் பாணியில் அவனிடம் நடத்திய விசாரணையில் ராகேஷ் ஷர்மா ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்வது தெரியவந்தது. கத்தார் நாட்டில் வேலை பார்த்தபோதும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆசை வார்த்தை கூறி பெண்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளான். அதேபோல் அங்கிருந்து திரும்பிய ராகேஷ், அங்கு போலவே இங்கும் ஏமாற்றிப் பணம் பறிக்கும் எத்தனாக மாறினான்.
தற்போது சென்னை, காஞ்சிபுரம், கோவை என பல ஊர்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பெண்களை மேட்ரிமோனி இணையதளம் மூலம் ஏமாற்றி பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மோசடிப் பேர்வழியான ராகேஷ் ஷர்மாவை கைது செய்த கொடுங்கையூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்கு ராகேஷ் ஷர்மா மீண்டும் ஒரு உதாரணம்.