சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இ-பாஸ் எடுப்பதற்காக, தனியார் மருத்துவக்கல்லூரி ஆய்வகத்தில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் குடும்பத்துகே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஆய்வில் கொரோனா இல்லை என்று முடிவு வெளியாகி உள்ளது. குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய ஆய்வு முடிவின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை வட பழனியை சேர்ந்த பெண் ஒருவர் திருப்பத்தூரில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்த்துக் கொள்வதற்காக இ- பாஸ் வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
முன் எச்சரிக்கையாக தங்கள் குடும்பத்தில் உள்ளோருக்கு கொரோனா பாதிப்பு இருக்கின்றதா ?என்பதை தெரிந்துகொள்ள கடந்த 14 ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சொந்தமான ஆய்வகத்தில் தலா 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அன்று மாலை வெளியான ஆய்வு முடிவில் 3 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், விரும்பினால் தங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே ஆரோக்கியமாக இருந்த தங்களுக்கு கொரோனா தொற்று எப்படி வந்திருக்கும் ? என்று குழம்பிய அந்த பெண்ணின் குடும்பத்தினர் 3 பேரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த முடிவு வருவதற்கு 24 மணி நேரம் ஆகும் என்ற நிலையில் தனியார் மருத்துவமனையின் ஆய்வு முடிவை அறிந்து, மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக திருப்பத்தூர் செல்ல இயலாமல், சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் கல்லூரி சிகிச்சை மையத்தில் 3 பேரும் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.
15ஆம் தேதி வெளியான அவர்களது அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து விட்டால் போதும் என்று வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
மாறுபட்ட சோதனை முடிவு குறித்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவகல்லூரி மருத்துவமனையின் கொரோனா பரிசோதனை மைய பொறுப்பாளர் மருத்துவர் சசிகுமார் தங்களது ஆய்வில் என்ன வந்ததோ அதனை கனிணி முறைப்படி முடிவாக தருவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அரசு மருத்துவர் ஒருவர், பரிசோதனைக்காக மூக்கு மற்றும் தொண்டைக்குள் சரியான முறையில் சளி மாதிரியை சேகரிக்க தவறினால் முடிவு நெகட்டிவ் என்று வரும் என்றும், முதல் நாள் பாசிட்டிவ் 2ஆவது நாள் நெகட்டிவ் என்று ஆய்வு முடிவுகள் வெளியாவதற்கு இதுவே முக்கிய காரணமாக உள்ளது என்றார்.
அதே நேரத்தில் மாறுபட்ட முடிவுகள் சில நேரங்களில் நோயற்றவர்களை , நோயாளிகளாகவும், நோயாளிகளை நோயற்றவர்களாகவும் மாற்றி விடுகின்றது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.