தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெயரில் போலியாக இ-மெயில் வெளியிட்டு அவதூறு பரப்பியதாக யூ-டியூப்பர் மாரிதாஸ் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், தொலைக்காட்சியின் நிர்வாகி பெயரில் மாரிதாசுக்கு போலியாக இமெயில் அனுப்பிய நபர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாரிதாஸ் பதில்கள் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் மாரிதாஸ் என்பவர், அண்மையில் தனியார் தொலைக்காட்சி குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை 5-ந்தேதி வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தனது குற்றச்சாட்டை ஏற்று சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக குறிப்பிட்ட தொலைக்காட்சியின் நிர்வாகியிடம் இருந்து இ- மெயில் மூலம் பதில் வந்திருப்பதாக மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டார் மாரிதாஸ்..!
இந்த நிலையில், அந்த தொலைக்காட்சியைச் சேர்ந்த வினய் சரவோகி என்பவர் கடந்த 15 ந்தேதி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் , மாரிதாஸ் தனது நிறுவனம் குறித்தும், பணியாளர்கள் குறித்தும் அவதூறாக வீடியோ பதிவிடுவதாகவும், தான் அவருக்கு அனுப்பியது போன்று போலியான இ-மெயில் வெளியிட்டு அவதூறு பரப்புவதாகவும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இது குறித்த புகாரை மத்திய சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர். மாரிதாஸ் மீது புகார் அளித்த தொலைக்காட்சிக்கு, முன்னதாகவே கடந்த 14 ந்தேதி சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியில் பொறுப்பில் உள்ள வினய் சரவோகி பெயரில் மர்ம நபர்கள் தனக்குப் போலியாக இ- மெயில் அனுப்பி வைத்ததாக மாரிதாஸ் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வினய் சரவோகி பெயரில் மாரிதாஸுக்கு மெயில் அனுப்பிய அடையாளம் தெரியாத நபர் மீது மட்டும் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட நபர் சிக்கியதும், அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இதில் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்ற நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
யூடியூப், முகநூல், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அறுவெறுக்கத்தக்க வகையிலும் படங்களையும் செய்திகளையும் பரப்புவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் மட்டுமே தண்டனைக்குரிய குற்றம் என்றும், மற்றவை கருத்து சுதந்திரத்துக்குள் வந்துவிடும் என்பதால் மாரிதாஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.