நாகர்கோவில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சரிவர உணவு வழங்கப்படவில்லை எனக் கூறி, முகாமை விட்டு வெளியேறும் போராட்டம் நடத்த, கைக்குழந்தைகளுடன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700க்கும் அதிகமான கொரானா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு போதிய இடம் இல்லாததால், அறிகுறி இன்றி கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் கோணம் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு போதிய அளவு மதிய உணவு வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. மதியம் வழங்கப்படும் அதே சாம்பார்- ரசத்தை இரவில் பழைய சோறு போல சாப்பிட கொடுத்ததால் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கொசுக்கடியாலும், போதிய சுகாதார வசதி இல்லாததாலும் அவதிப்பட்ட பெண்கள் கைகுழந்தையுடன் ஆவேசமாக போர்க்குரல் எழுப்பினர்.
நோயாளிகளுக்கு அங்கு வழங்கப்படும் உணவு சரியில்லை என்று ஏற்கனவே பல முறை சொல்லியும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
மருத்துவரோ, சுகாதாரதுறை அதிகாரிகளோ, தூய்மைப் பணியாளர்களோ கடந்த 3 தினங்களாக அந்த சிகிச்சை மையத்திற்கு முறையாக வரவில்லை என்றும் அங்கிருந்தவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தங்களில் பிரச்சனைகளை காது கொடுத்துக் கேட்க அரசு அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை என்றும், செல்போனில் தொடர்பு கொள்ளவும் இயலவில்லை என்றும் புகார் தெரிவித்த நோயாளிகள், சிகிச்சையில் இருந்து வெளியேறப் போவதாக பகிரங்கமாக அறிவித்து சமூக இடைவெளியின்றி மொத்தமாக திரண்டனர்.
மொத்தமாக அனைவரையும் வெளியேறி விடாமல் தடுத்து, கல்லூரிக்கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அங்குள்ள நோயாளிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
கோட்டார் காவல்துறை ஆய்வாளர் தனது கையில் இருந்து பணத்தைப் போட்டு உணவு திருப்தியில்லை என்று சொன்னவர்களுக்கு ஓட்டலில் இருந்து புரோட்டா, முட்டை, ஆம்லட் போன்றவற்றை வாங்கி கொடுத்தபிறகே அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
நோயாளிகள் கோரிக்கை வைத்தபடி கொசுக்கடிக்காமல் இருக்க கொசுவலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்களை வரவழைத்து அங்கு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று கொரோனா சிகிச்சை மையங்களில் உணவு சரியில்லை என்ற புகார்கள் வரும்போது, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கைககளை உடனடியாக மேற்கொண்டால் இது போன்ற பிரச்சனைகள் எழாது என்கின்றனர் பாதிப்புக்குள்ளான நோயாளிகள்.