தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாகக் கூடும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், சங்கர நாராயணர் கோவிலைத் திறக்க கோரி காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டத்தில் அவர் மட்டுமே பங்கேற்ற வினோதம் அரங்கேறி இருக்கின்றது...
தமிழகத்தில் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டும் கிராமப்புற கோவில்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் திருப்பதி என்பவர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோவிலை திறந்து வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து அவருக்கு ஆதரவாக ஒருவர் கூட ஆர்ப்பாட்டத்துக்கு வராத நிலையில், தனி நபராக கட்சிக் கொடியை கையில் ஏந்தி கோவிலைத் திறக்க வலியுறுத்தி முழங்கும் நிலை ஏற்பட்டது.
காவல்துறை அனுமதியுடன் காங்கிரஸ் பிரமுகர் நடத்திய இந்த ஆன்மீக ஆர்ப்பாட்டத்தின் பாதுகாப்பு பணிக்கு ஒரே ஒரு பெண் காவலர் மட்டுமே வந்திருந்தார். ஆன்மீகத்தையும் சித்தமருத்துவத்தையும் கலந்து கட்டி மூச்சுப்பிடிக்க பேசிக் கொண்டிருந்த திருப்பதியின் பேச்சை கேட்க அங்கு ஒருவர் கூட இல்லை என்பது நடிகர் வடிவேலுவின் தி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோவை நினைவுபடுத்தியது..!
தான் பேசுவதை தானே கேட்டு வினோதமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய திருப்பதி ஒரு கட்டத்தில், வேறொரு இடத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு திரும்பி பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.