துபாயில் இருந்து அதிக கட்டணம் கொடுத்து விமானத்தில் தாயகம் திரும்பிய தமிழர்கள் 200 பேர் சொந்த செலவில் ஓட்டல்களில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓட்டலில் ஒரே படுக்கையை இருவர் பகிர்ந்து கொள்ளும் வகையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அரபு நாடுகளில் இருந்து விமானத்தில் தமிழகம் திரும்புவோருக்கு மருத்துவபரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 7 நாட்கள் தனிமைப்படுத்தப் படுகின்றனர்.
தங்கும் விடுதி செலவை பெரும்பாலும் அவர்கள் பணிபுரிந்த தனியார் நிறுவனங்களோ அல்லது சொந்த பணத்தில் இருந்தோ ஓட்டல்களுக்கு செலுத்துகின்றனர். சொந்தமாக கட்டணம் செலுத்த இயலாதவர்கள் மட்டும் அரசு செலவில் தனியார் கல்லூரிகளில் தனிமைப் படுத்தப்படுகின்றனர்.
அந்தவகையில் 3 தினங்களுக்கு முன் துபாயில் இருந்து சென்னை வந்த 200க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தங்குவதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்கள் பணிபுரிந்த நிறுவனங்கள் முன்கூட்டியே டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கி விட்டதாக கூறப்படுகின்றது.
விமான நிலையத்தில் இருந்து போதிய சமூக இடைவெளியை பின்பற்றாமல் பேருந்துகளில் ஏற்றி சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல்களுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது.
அங்கு சுகாதாரதுறையின் அறிவுருத்தலை மீறி தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று பெரியமேட்டில் உள்ள கிரீன் கேட்ஸ் உள்ளிட்ட 3 ஓட்டல்களில் ஒரு அறைக்கு இருவர் என்ற முறையில் தங்க வைத்ததாகவும், அந்த அறையில் சம்பந்தம் இல்லாத இருவர் ஒரே படுக்கையில் படுத்திருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் தாயகம் திரும்பியோர் புகார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டார் ஓட்டலுக்குறிய கட்டணம் வாங்கிக் கொண்டு குளிக்க சுத்தமான தண்ணீரோ, துடைக்க டவலோ, வாசனை சோப்பு உள்ளிட்ட வழக்கமான வசதிகள் கூட ஓட்டல் நிர்வாகத்தினர் செய்து தரவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கும் தாயகம் திரும்பியோர், 3 நாட்களுக்கு பின்னர் தான் மருத்துவ பரிசோதனைகளே நடத்தப்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்
இன்னும் சிலர் தங்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படவில்லை என்றும் கொடுக்கின்ற சாப்பாடு வயிற்றிற்கு கூட போதவில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்த கிரீன் கேட்ஸ் ஓட்டல் நிர்வாகத்தினர் விருந்தினர்களை அழைத்து வரும் நிறுவனம் தங்களுக்கு அறிவுறுத்தியபடி அவர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எந்த ஒரு பயணியும் நேரடியாக தங்களிடம் பணம் செலுத்தவில்லை என்றும் தெரிவித்தனர்.
கணவன் மனைவியாக இருந்தால் மட்டுமே ஒரே அறையில் இருவர் தங்கலாம் சம்பந்தம் இல்லாத நபர்களை ஒரே அறையில் அதுவும் ஒரே படுக்கையில் தனிமைப்படுத்தி இருக்க செய்வது தவறான நடவடிக்கை என்று எச்சரிக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பதில் பரவவழிசெய்து விடும் என்று இது குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தபட்டவர்களை சந்தித்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அதிகாரிகள், வெளி நாட்டில் இருந்து தாயகம் திரும்புவோரை பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கில் கொரோனா பரவலுக்கு வழிவகுத்து வரும் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டியதும் அவசியம்.