கோவையில் இயற்கை மீது ஆர்வங் கொண்ட இளைஞர்கள் ஜப்பானின் மியாவாக்கி முறையில் அமைத்துள்ள குறுங்காடு பசுமையுடன் பூத்துக் குலுங்கிப் பல்லுயிர்ப் பெருக்கச் சூழலை உருவாக்கியுள்ளது.
இயற்கையை வரம்புக்கு மீறிச் சுரண்டியதன் விளைவாகப் பல காடுகள் அழிக்கப்பட்டுக் குடியிருப்புகளாகவும், விடுதிகளாகவும் உருமாறியுள்ளன. இதன் எதிர்விளைவுகள் வறட்சி, வெள்ளம், நிலச்சரிவு எனப் பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.
இந்த நிலையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் செயல்பட்டு வரும் இளைஞர் படையினர் 163 வாரங்களாக ஞாயிறுதோறும் குளக்கரையோரம் திரண்டு, பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்களின் உதவியுடன் குளங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர்.
குளங்களுக்கு நீர் வரும் பாதையையும் சீரமைத்து வருகின்றனர். குளக்கரைகளைப் பாதுகாக்கப் பனங்கொட்டைகளையும் ஊன்றியுள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த குளங்களில் நீர் தேங்கும் சூழல் உருவாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் முயற்சியாக வெள்ளலூர் குளத்தைச் சுற்றிலும் 10 மீட்டர் அகலம் 750 மீட்டர் நீளத்திற்கு அடர்வனம் அமைத்துள்ளனர்.
இந்த வனத்தில் நிழல்தரும் மரங்கள், கனிதரும் மரங்கள் என ஐயாயிரம் மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர். புல், பூண்டு, செடி, கொடி வகைகளையும் இடையிடையே நட்டு வளர்த்து ஜப்பானிய மியாவாக்கி முறையில் பசுஞ்சோலையையே உருவாக்கியுள்ளனர்.
ஒவ்வொரு தாவர இனத்தின் பெயரையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் லத்தீன் மொழியிலும் எழுதிப் பலகை நாட்டியுள்ளனர். இளைஞர்களின் இந்த முயற்சியால் குளத்தைச் சுற்றியுள்ள காட்டில் தேனீ, எறும்பு, வண்ணத்துப்பூச்சி, அணில் உளிட்ட அனைத்து உயிர்களும் வாழும் உயிரிப் பன்மயச் சூழல் ஏற்பட்டுள்ளது. வெள்ளலூர் குளத்தில் தண்ணீரும் உள்ளதால், அரிய வகை பறவை இனங்கள் வந்து செல்கின்றன.
உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதை உணர்ந்து செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் இளைஞர் படைக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கோவை இளைஞர்களைப் பின்பற்றித் தமிழகம் முழுவதும் உள்ள குளங்களை இதேபோல் பராமரித்தால், அங்குள்ள பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கான வாழ்விடம் உறுதி செய்யப்படும்.