கேரளாவில் ஐக்கிய அரபு அமீர தூதரகம் மூலம் 90 கோடி ரூபாய் அளவுக்கு தங்க கடத்தலில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த ஸ்வப்னாவை பெங்களூருவில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலத்திற்குள் அரசியல் பிரமுகர்கள் துணையுடன் நுழைந்ததாக வெளியாகியுள்ள தகவல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் நிர்வாக செயலாளராக இருந்தவர் ஸ்வப்னா சுரேஷ்.
அந்த தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தூதரக மக்கள் தொடர்பு அதிகாரியான சரித்குமாருடன் சேர்ந்து 90 கோடி ரூபாய் அளவுக்கு தங்கடத்தலில் ஈடுபட்டதாக அரசியல் வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஸ்வப்னா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் தலைமறைவானார்.
ஸ்வப்னா கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 30 கிலோ தங்கம் சுங்கத்துறையினர் வசம் உள்ள நிலையில் ஸ்வப்னா எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. தலைமறைவாக இருந்து கொண்டே ஆளும் கட்சியின் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக ஆடியோ ஒன்றையும் ஸ்வப்னா வெளியிட்டார்.
இந்த தங்க கடத்தல் வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்ட நிலையில், பெங்களூரில் உள்ள எலகங்கா என்ற பகுதியில் கூட்டாளி சந்தீப் நாயருடன் பதுங்கி இருந்த ஸ்வர்ன கடத்தல் ஸ்வப்னாவை என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த தங்க கடத்தல் கும்பல் வெளி நாடுகளில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் மட்டுமல்ல, தமிழகத்தின் திருச்சி விமான நிலையம் வழியாகவும் நூற்றுகணக்கான கிலோ தங்கத்தை கடத்தி இங்கிருந்து பெங்களூருக்கு கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த தங்ககடத்தல் கும்பலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாகவும் அதனால் தான் இந்த வழக்கு என்.ஐ.ஏவின் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் இந்த தங்க கடத்தலில் தொடர்புடைய தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த 7 முக்கிய பிரமுகர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர என்.ஐ.ஏ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதே நேரத்தில் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி திருமணத்திற்கு செல்வதற்கு கூட மாநில எல்லையை கடக்க அனுமதி வழங்காமல் கெடுபிடிகாட்டும் கேரள அரசு, தங்க கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னாவை பாதுகாப்பாக அனுப்பி வைத்தது ஏன்? என்று பினராயி விஜயன் அரசுக்கு எதிராக எதிர்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேநேரத்தில் கர்நாடகவை ஆளும் பாஜக அரசு தான், தங்க கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னாவை பெங்களூருக்குள் நுழைய விட்டு பாதுகாத்ததாக கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே அரசியல் செல்வாக்குள்ள ஒரு நபரின் காரின் மூலமாக ஸ்வப்னா கேரளாவில் இருந்து வெளியேறி பாதுகாப்பாக பெங்களூருக்குள் சென்று சந்தீப் நாயருடன் பதுங்கியது தெரியவந்துள்ளது.
அந்த முக்கிய பிரமுகரும் என்.ஐ.ஏவின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே, தங்கம் கடத்தல் வழக்கில் பெங்களூரில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் இன்று விசாரணைக்காக கொச்சி அழைத்துச் செல்லப்படுகிறார். முன்னதாக அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு திருவனந்தபுரத்தின் நெடுமண்காடு பகுதியில் உள்ள சந்தீப்பின் இல்லத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் தங்கம் வைக்கப்பட்டிருந்த பைகளும் கைப்பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. சந்தீப் நாயர் சுங்க அதிகாரியாக பணியாற்றியவர் என்றும் ஏற்கனவே அவர் தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டதாகவும் ஆதாரமில்லாமல் வழக்கில் இருந்து தப்பியதாகவும் சொல்லப்படுகிறது. அவர் 2013ம் ஆண்டு முதலே தங்கக்கடத்தலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் விசாரணைக்காகக் கார்களில் கேரளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். பெங்களூரில் இருந்து இரு கார்களில் ஸ்வப்னா சுரேசும், சந்தீப் நாயரும் தனித்தனியாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
கோவை வழியாக வந்த கார்கள் பகல் 11 மணிக்கு வாளையாறு சோதனைச் சாவடியைக் கடந்து கேரளத்துக்குச் சென்றன. திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியில் சென்றபோது ஒரு காரின் டியூப் பஞ்சரானதால் மற்றொரு கார் மூலம் இருவரும் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
செல்லும் வழியில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொச்சிக்குச் சென்றுசேரத் தாமதமானது. கடவந்தரா என்னுமிடத்தில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
தங்க கடத்தல் வழக்கில் என்ஐஏ-வால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு கேரளா கொண்டுவரப்பட்ட சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவருக்கும் கொச்சி ஆலுவா அரசு மருத்துவமனையில், உடல் மற்றும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்கள் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
அதன் பின்னர் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த இருவரும் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது. இன்று, காலை 11.15 மணி அளவில் இந்த இருவருடன் என்ஐஏ அதிகாரிகள் வந்த வாகனங்கள் கேரள எல்லையான வாளையாறு வழியாக கேரளாவில் நுழைந்தன. அதன் பின்னர் வடக்காஞ்சேரி என்ற இடத்தில் வைத்து சொப்னா சுரேஷ் வந்த வாகனத்தின் டயர் பஞ்சரானதால், வேறு வாகனத்தில் அவர் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டார்.