மருத்துவகுணம் கொண்ட அத்திப்பழம் கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமோகமாக விளைந்துள்ளது. ஆனாலும், அவற்றை விற்க முடியாமல் தவிப்பதாகக் கூறுகின்றனர் வியாபாரிகள். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்.
கொரோனா ஊரடங்கால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் முடங்கிக் கிடப்பதால், சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பியுள்ள மலைப் பிரதேச மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
மலைப்பகுதிகளில் விளையும் பழங்கள் சுவை மிகுந்ததாக இருப்பதுடன், மருத்துவ குணமும் நிறைந்தவையாகும். மேட்டுப்பாளையம் கல்லார் மலைப்பகுதியில் விளையும் துரியன் பழம் கர்ப்பம் தரிக்க உதவும் என மக்கள் நம்புவதால், சீசன் காலத்தில் முன்பதிவு செய்து துரியன் பழங்களை வாங்குமளவுக்கு கிராக்கி உண்டு.
அதேபோல, கொடைக்கானல் மலையில் விளையும் மருத்துவ குணமிக்க அத்திப்பழம், சீசன் காலத்தில் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகும். இந்த ஆண்டு, அமோக விளைச்சல் இருந்தும் அவற்றை விற்க முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.
அடுக்கம் மலை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு ஆகிய இடங்களில் அத்தி மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. சீசன் காலமென்பதால், இந்த மரங்களில் அத்திப்பழங்கள் கொத்துக் கொத்தாக விளைந்து தொங்குகின்றன. இவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவக் கூடியவை என்கின்றனர் மருத்துவர்கள்..
விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு, மலையில் விளையும் பழங்களை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் வியாபாரிகளுக்கும் உதவ வேண்டுமென்பதே கொடைக்கானல் பழ வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.