சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் இருந்து 10 பேரும், டெல்லியிலிருந்து ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் என இரு குழுக்களாக சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்தனர்.
பின்னர் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின், வழக்கு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம், சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் ஒப்படைத்தார்.
இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் சேகரித்த ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், சாத்தான்குளம் காவல்நிலையம், கோவில்பட்டி கிளைச்சிறை மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட தடயங்களையும் சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோன்று கைது செய்யப்பட்ட 10 போலீசாரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அவர்கள் மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சாத்தான்குளம் வழக்கு தொடர்பான நீதிபதி பாரதிதாசன் விசாரணை அறிக்கை, ரத்தக்கறை படிந்த பொருட்கள் ஆகியவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.