சாத்தான்குளம் தந்தை மகனை விசாரணைக்காக அழைத்துச்சென்று காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போலீஸ் கைதிகள் 5 பேருக்கும் மதுரை மத்திய சிறையில் தனி வீடு வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்ததாக 5 போலீசார் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்களாக இருந்த ரகுகணேசன், பாலகிருஷ்ணன், தமைகாவலராக இருந்த முருகன், போலீஸ்காரரான முத்துராஜ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
அங்கு யாரோ ஒரு கைதி முறைத்து பார்த்தான் என்பதற்காக அஞ்சி நடுங்கிய இந்த 5 போலீஸ் கைதிகளும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி அங்கிருந்து மதுரை சிறைக்கு மாற்ற கோரியதாக கூறப்பட்டது. இதையடுத்து அச்சத்தில் தவித்த 5 போலீசாரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சொகுசான வசதிசெய்து கொடுப்பதற்காகவே பாதுகாப்பு குறைப்பாடு என கூறி 5 பேரையும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றி இருப்பதாக வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். இந்த நிலையில் அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போல மற்ற கைதிகளை போல சிறைக்குள் அடைக்கப்படாமல், கொரோனா முகாமில் தனிமைப்படுத்தி வைத்திருப்பது போல மத்திய சிறைக்குள் இருக்கின்ற வீடு ஒன்று கொலை வழக்கில் கைதான இந்த 5 போலீஸ் கைதிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
5பேரின் குடும்பத்தினரும் அவர்களை சந்தித்து பேசிய நிலையில், அவர்களை செவ்வாய்கிழமை வழக்கறிஞர் ஒருவர் சந்தித்து ஜாமீன் மனுதாக்கல் செய்வது குறித்து பேசியதாக கூறப்படுகின்றது.
5 பேரும் சாப்பாட்டிற்காக கூட மற்ற கைதிகளுடன் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் இருக்கும் அறைக்கே சாப்பாடு வந்து விடுவதாகவும் எந்த ஒரு கைதியும் இந்த 5 பேரையும் பார்க்க இயலாத வகையில் பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
அந்த வீட்டில் உள்ள அறைகளை ஆளுக்கு ஒன்றாக ஒதுக்கி இருப்பதாகவும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் என்றால் மட்டுமே இந்த வீட்டில் அடைக்கப்படுவது வழக்கமான நடைமுறை என்றும் சிறைவிதிகளுக்குட்பட்டே அவர்களுக்கு தனி வீட்டில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள சிறைத்துறை டிஐஜி பழனி, 5 போலீஸ் கைதிகளுக்கும் தூத்துக்குடி சிறையில் எந்த ஒரு பாதுகாப்பு அச்சுருத்தலும் இல்லை என்றும் நிர்வாக காரணங்களுக்காகவே அவர்கள் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த கொலை வழக்கின் விசாரணையானது சாத்தான்குளம் காவல் நிலையம் மற்றும் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து நடக்கின்றது, அப்படி இருக்க என்ன நிர்வாக காரணங்களுக்காக 5 பேரும் மதுரை ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர் ? என்று கேள்வி எழுப்பும் வழக்கறிஞர்கள், ஒரு கொலை அல்ல இரு கொலை வழக்குகளில் தொடர்புடைய 5 பேரையும், மற்ற சாதாரண விசாரணை கைதிகளை போல நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலைவழக்கில் தொடர்புடையதாக குற்றச்சாட்டுக்குள்ளான பிரண்ட்ஸ் ஆப் போலீசார் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீசாருக்கு சிறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் புதிய சர்ச்சைகளை கிளப்பி விட்டுள்ளது.
அதே நேரத்தில் தற்போது வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்க உள்ள நிலையில் வரும் நாட்களில், இந்த 5 போலீஸ் கைதிகளும் மற்ற கைதிகளை போல நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.