சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை மகன் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த சென்ற நீதிபதியை மிரட்டி சவால் விட்டதாக தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி., சாத்தான்குளம் டி.எஸ்.பி மற்றும் போலீஸ்காரர் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் அழைப்பை ஏற்று தந்தை ஜெயராஜும் அழைத்து வர மகன் பென்னிக்ஸும் அமைதியாக காவல் நிலையம் சென்ற நிலையில், தந்தையும் , மகனும் தரையில் புரண்டனர் என்று முதல் தகவல் அறிக்கையில் உதவி ஆய்வாளர் ரகுகணேசன் குறிப்பிட்டது பொய் என்பது சிசிடிவியால் அம்பலமானது.
தந்தை மகன் இரட்டை மர்ம மரண வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணை நடத்தி வரும் நிலையில், விசாரணைக்கு சென்ற கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் மிரட்டப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் உரிய ஆவணங்களை ஒப்படைக்க மறுத்து தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் இறுக்கம் காட்டிய நிலையில், சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் என்பவரோ எந்த கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்து மாஜிஸ்திரேட் பாரதிதாசனை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்துள்ளார்.
பாரதிதாசனின் உத்தரவையும் மீறி போலீஸ்காரர் மகராஜன் என்பவர் அவரை சுற்றி சுற்றி செல்போனில் படம் பிடித்ததோடு ( உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா..! என்று ) ஏக வசனத்தில் மிரட்டியபடி சவால் விட்டுள்ளார்.
இதனை இமெயில் மூலம் புகார் மனுவாக உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிவைத்தார். இந்த புகாரை சம்பந்தபட்ட காவல்துறையினரின் நீதிமன்ற அவமதிப்பாக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி பிரதாபன், போலீஸ்காரர் மகராஜன் ஆகிய 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டதோடு, சம்பந்தப்பட்ட 3 பேரையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், ஆதாரங்களையும் காவல்துறையினர் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நீதிபதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிபதியை அவமரியாதையாக பேசிய புகாருக்கு உள்ளான, தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் மற்றும் காவலர் மகராஜன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், மூவரையும் பணியிட மாற்றம் செய்யுமாறும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுடன் இருந்த காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.