மதுரை மாவட்டம் கருப்பாயூரணியில், சாலையின் நடுவே கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டு குடிகாரர் ஒருவர் ரகளை செய்ததால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் குடித்துவிட்டு அத்துமீறும் குடிமகன்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி - மதுரை ரோட்டில் உள்ள மதுபானக் கடையில் நாள்தோறும் ஏராளமான கூலித்தொழிலாளர்கள் முதல் இளைஞர்கள் வரை வரிசைகட்டி மதுவை வாங்கி அருகிலேயே அமர்ந்து குடித்துவிட்டு, மதுபோதையில் தினசரி அடாவடி செய்வதை வாடிக்கையாக்கி வருகின்றனர்.
அந்தவகையில் அங்கு மது அருந்திய குடிகாரர் ஒருவர் கருப்பாயூரணி சாலையை பஞ்சுமெத்தையாக பாவித்து, கால்மேல் கால்போட்டு படுத்துக்கொண்டு செய்த அலம்பலால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகன ஓட்டிகளை கடுப்பேற்றும் வகையில், எதையோ தின்றுவிட்டு ஜீரணமாகாத மலைப்பாம்பு போல குடிகார இளைஞர் வம்படியாக படுத்திருந்தபோதும், ஒருவர் கூட சத்தம் போட முன்வரவில்லை.
வானத்தை பார்த்தபடி மல்லாக்கப் படுத்திருந்த அந்த வருத்தப்படாத வாலிபரைக் கண்டு, வில்லங்கம் எதற்கு என்று வாகன ஓட்டிகள் விலகிச்சென்றனர்
இரு சக்கர வாகன ஓட்டிகள் தலையை தட்டிச்செல்லாமல் விலகிச்சென்றதால் குடிமகனுக்கு புதுத் தெம்பு கிடைத்தது.
அப்போது வேகமாக வந்த டிரெயிலர் லாரி ஒன்றின் ஓட்டுனர், குடிமகரை ஒட்டினாற் போல லாரியை ஓட்டி, பந்தாவாக படுத்திருந்த குடிமகரை பதறவைத்து மரணபயத்தை காட்டிச் சென்றார்
இதையடுத்து, 3 மணி நேரத்துக்கும் மேலாக நடு ரோட்டில் மல்லாந்து கிடந்த அந்த குடிகார வண்டி, அங்கிருந்து நகர்ந்து வேறு இடத்திற்கு சென்றது. அவசரத்திற்கு அழைத்தால் ஆம்புலன்சுடன் வரும் காவல்துறையினர் கடைசிவரை அங்கு வரவேயில்லை.
குடிமகன்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அப்பகுதியில் காவல்துறையினர் தொடர்கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.