கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தனி நபர் இடைவெளியுடன் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான புதிய போக்குவரத்து சென்னையில் தயாராக உள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...
கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பொது போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் போது பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சென்னைக்கான மாற்று போக்குவரத்து என்பது மிக அவசியமாக இந்நேரத்தில் பார்க்கப்படுகிறது. தற்போதைய ஊரடங்கு முடிந்தபின் சென்னையில் பேருந்துகள் இயங்கினாலும் சமூக இடைவெளியை பின்பற்றி 50 விழுக்காடு பயணிகள் மட்டுமே பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் இதற்கு மாற்று ஏற்பாடாக ஸ்மார்ட் பைக் நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி இணைந்து செயல்படுத்தி வரும் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை, மேலும் விரிவுப்படுத்த, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தற்போது சென்னையில் 78 இடங்களில் பயன்பாட்டில் உள்ள சைக்கிள் ஷேரிங் திட்டத்தின் மூலம் Eco bike என்று சொல்லக்கூடிய 500 ஸ்மார்ட் சைக்கிள்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இதனை மேலும் விரிவுபடுத்த கூடுதலாக 1000 சைக்கிள்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் Electric bike என்று சொல்லக்கூடிய 500 எலக்ட்ரிக் சைக்கிள்களும், Next Generation bike என்று சொல்லக்கூடிய செயின் இல்லாமல் ஓடக்கூடிய 500 சைக்கிள்களும் புதிதாக இடம் பெற்றுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் பேட்டரியால் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் சைக்கிள் மற்றும் பழுது ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Chainless, Tubeless சைக்கிள்கள் சென்னையில் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மணிக்கு 25 முதல் 30 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட எலக்ட்ரிக் சைக்கிள்களில் மூன்றில் ஒரு பங்கு தூரம் பெடலை மிதித்தாலே மீதமுள்ள இரண்டு பங்கு தூரம் பேட்டரி மற்றும் மோட்டார் மூலம் தானாகவே செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் சைக்கிள் ஷேரிங் திட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும் அடுத்த ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் தலா 9 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் பேட்டரியால் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் சைக்கிள் திட்டத்திற்கு ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 ரூபாய் வீதம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கு காரணமாக செயல்படாமல் இருந்த Eco bike சைக்கிள் ஷேரிங் திட்டம் கடந்த 8 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது. ஊரடங்கின் அடுத்த தளர்வில் இருந்து எலக்ட்ரிக் சைக்கிள்கள் அரசின் ஒப்புதலோடு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 78ஆக உள்ள சைக்கிள் நிலையங்கள் எலக்ட்ரிக் சைக்கிள் மற்றும் Chain less சைக்கிள்கள் பயன்பாட்டிற்கு வரும்போது 500 நிலையங்களாக விரிவுபடுத்தப்பட்டு சென்னை மாநகர் முழுவதும் 1500 ஸ்மார்ட் சைக்கிள்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் சென்னை மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தனி நபர் இடைவெளியுடன் நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய ஸ்மார்ட் சைக்கிள்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.