ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மதுரையில் 40 லட்ச ரூபாய் ஏமாற்றியவரைப் பாதிக்கப்பட்டோர் கடத்திச் சென்ற நிலையில், காவல்துறையினர் 24 மணி நேரத்துக்குள் மீட்டுள்ளனர்.
மதுரை விராட்டிப்பத்து பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன் ரயில்வேயில் ஒப்பந்தக்காரராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர் உசிலம்பட்டி பூமிநாதன், சமயநல்லூர் சுரேஷ், அலங்காநல்லூர் பழனிராஜன், வெற்றிக்குமார், சோழவந்தான் நாகமணி ஆகியோரிடம் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் 40 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். போலியான பணி ஆணைகளைத் தயாரித்து அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இந்தப் பணி ஆணையைப் பெற்ற இளைஞர்கள் 5 பேரும் ஆர்வத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை அணுகி வேலையில் சேர்வதற்காக உத்தரவைக் காட்டிய போது அது போலியானது எனத் தெரியவந்துள்ளது.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர்கள் 5 பேரும், சனி மாலையில் விராட்டிப்பத்துக்கு ஒரு காரில் வந்து ரெங்கநாதனைக் கடத்திச்சென்று, தாங்கள் கொடுத்த 40 லட்ச ரூபாயைத் திருப்பிக் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் ரெங்கநாதனின் மனைவி தனது கணவர் கடத்தப்பட்டதாக மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் வாடிப்பட்டி அருகே ரெங்கநாதனையும், அவரைக் காரில் கடத்திய இளைஞர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
ரெங்கநாதனிடம் விசாரித்தபோது அவர் மேலும் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்துள்ளது. அவர் மீது கரிமேடு, எஸ்எஸ்காலனி உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேர்மையான முயற்சிகளைச் செய்யாமல் பணங்கொடுத்து அரசு வேலை பெற்றுவிடலாம் என்று எண்ணி, பிறகு ஆள் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள்,...அரசு வேலை ஆசையைத் தூண்டிலாக்கி லட்சக்கணக்கில் பணம் பறித்த ரெங்கநாதன்...ஆகியோரின் செயல்கள் ஒருவர் ஏமாளியாகவோ, ஏமாற்றுபவராகவோ இருக்கக் கூடாது என்பதைக் காட்டும் பாடமாக அமைந்துள்ளன.