திருப்பூரில் டிக்டாக் மற்றும் முகநூலில் கல்லூரி மாணவி என காதல் கவிதைகள் பாடி, இளைஞர்களுக்கு காதல் வலைவிரித்து பணம் பறிப்பில் ஈடுபட்ட இளம் பெண் மதுரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
காதல் தோல்வியில் கலங்கி இதயத்தை உருக்குவது போல டிக்டாக்கில் டெம்ப்ளேட் வைத்து பல இளைஞர்களின் பாக்கெட்டுக்கு வேட்டு வைத்த அந்த 49அம்முக்குட்டி ஐடி இவர்தான்..!
ஒரு பெண் அழகாக இருந்தால் போதும் டிக்டாக் அடிமைகள் அவர்கள் என்ன செய்தாலும் லைக்குகளை அள்ளி வீசுவார்கள் அப்படி லைக்குகளோடு சேர்த்து பைசாக்களையும் அள்ளி வீசிவிட்டு வீதிக்கு வந்து புகார் அளித்தவர் மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த ஐ.டி ஊழியர் ராமச்சந்திரன்.
அவரை இதயத்தில் தாங்குவதாக கவிதைபாடிய அம்முக்குட்டி என்கிற சுசி அவரை பேச்சில் மயக்கி ஏங்க விட்டுள்ளார்
இழுத்த இழுப்புக்கெல்லாம் பல்லைக் காட்டும் நாய்க் குட்டி போல, தன் காதலி சுசி கேட்ட போதெல்லாம் பணத்தை அவரது வங்கி கணக்கிலும், போன் பே மூலமும் அனுப்பிவைத்துள்ளார், கடை எட்டாவது காதல் வள்ளல் ராமச்சந்திரன்..!
தன் மீது ராமச்சந்திரனுக்கு அதிக ஈர்ப்பு வர வேண்டும் என்பதற்காக நாயகர்கள் திரையில் பொழிந்த காதல் வசனங்களை எல்லாம் டிக்டாக்கில் வைத்ததோடு, முகத்தை காட்டாமல் முதுகை காட்டியதற்கே 96 ஆயிரம் ரூபாயை சுசியிடம் பறிகொடுத்துள்ளார் ராமச்சந்திரன்.
சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக்கில் நேரத்தை போக்குவோர் திருப்பூரில் ஒன்று கூடியுள்ளனர். அதற்கு காதலி சுசியை அழைத்துள்ளார் ராமச்சந்திரன். ஆனால் அவர் வரவில்லை சந்தேகம் அடைந்து விசாரித்த போது அவர் போலியான படங்களை அனுப்பி ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் ராமச்சந்திரன். அதன் பேரில் கல்லூரி மாணவியாக நடித்து பணம் பறிப்பில் ஈடுபட்ட திருப்பூர் ஆலங்காடு அடுத்த வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த இளம் பெண்ணை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் முக நூல் மற்றும் டிக்டாக்கில் பல போலியான கணக்குகள் மூலம் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் பழகி காதலிப்பது போல நடித்து முகத்தையே காட்டாமல் செல்போனில் பேசி மயக்கியே லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளது தெரியவந்தது.
ராமச்சந்திரன் மட்டுமல்ல பலர் இந்த பெண்ணின் டிக்டாக் கணக்கில் ஏராளமாய் மொய் எழுதிவிட்டு வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று முக்காடு போட்டுக் கொண்டு புகார் கொடுக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அழகை தேடிச்சென்றால் ஆபத்தும் சேர்ந்தே வரும் என்பார்கள் அதுபோல டிக்டாக் இருந்தால் அங்கு தீமை நிச்சயம் இருக்கும் என்பதே தற்போதைய சம்பவங்களில் தொடர்ச்சியாக உள்ளது.