சென்னையில், பல இடங்களில், முடிதிருத்தகங்கள் தொடங்கி மருத்துவமனைகள் வரை கொரோனா தடுப்பு கிருமி நாசினிக்கு என்று தனியாக கட்டணம் வசூலிப்பதால் வாடிக்கையாளர்கள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலையில் உள்ளனர்.
சென்னையில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் 70 நாட்கள் கழித்து திறக்கப்பட்டதால் அரசின் நிபந்த்னைக்கு ஏற்ப கிருமி நாசினி தெளித்து சமூக இடைவெளியுடன் முடித்திருந்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கிராமப்புற சலூன் கடைகள் தொடங்கி நகர்ப்புற அழகு நிலையங்கள் வரை முடிதிருத்தும் கட்டணத்தை கணிசமாக உயர்த்தி விட்டனர். முடிதிருத்தம், தாடி ட்ரிம் செய்தல் ஆகியவற்றுக்கு பில் வழங்கும் நேச்சுரல்ஸ் போன்ற அழகு நிலையங்களில் கொரோனா கிருமிநாசினிக்கு என்று 150 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் முடிதிருத்த சென்றால் சாதாரணமாக 500 ரூபாய் பில் வந்துவிடுகின்றது.
அதே போல மதுரையில் உள்ள கருத்தரித்தல் மையம் ஒன்றில் மருத்துவரின் ஆலோசனைக்கு செல்லும் நபர்களுக்கு கிருமிநாசினி வழங்க கூடுதலாக 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
பெரும்பான்மையான மருத்துவமனைகளில் இதனை மருத்துவக் கட்டணத்துடன் சேர்த்து விடுவதாகவும் கூறப்படுகின்றது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை கொரோனாவுக்காக ஏராளமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அதற்கான நிதியை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து குப்பைக் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர்.
சிறிய அளவிலான மளிகைக் கடை என்றால் 500 ரூபாய், சூப்பர் மார்க்கெட்டிற்கு 1000 ரூபாய், ஓட்டல்களுக்கு 2000 ரூபாய், பெரிய வணிக நிறுவனங்கள் என்றால் 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கு சில பகுதிகளில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அங்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைத்துள்ளனர்.
மாநகராட்சிக்கு தனித்தனியாக ஏற்கனவே வரி செலுத்தி வரும்நிலையில், குப்பைக்கு என்று தனியாக வசூலிப்பதற்கு வியாபாரிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. மக்களின் நலன் கருதி அதிக பொருட்செலவில் நோய்த்தடுப்பு பணிகளில் முனைப்புக் காட்டுவதால் மாநகராட்சிக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் மக்களுக்கு கொரோனாவுக்காக வசூலிக்கப்படும் இத்தகைய கூடுதல் கட்டணங்கள் மக்களுக்கு கூடுதல் சுமையே..!