மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்கள், கடற்படைக்கு சொந்தமான கப்பலில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர்.
ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்படுகின்றனர். அந்த வகையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஜலஸ்வா என்ற கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து கடந்த 5-ம் தேதி புறப்பட்ட 700 பேர் தூத்துக்குடி துறைமுகம் வந்தனர்.
இவர்களில் 509 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னதாக, துறைமுகம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு நடத்தினார்.
பயணிகளின் உடமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பயணிகள் அனைவரும் அரசுப் பேருந்து மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுவரை ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் மூலம் இலங்கை மற்றும் மாலத்தீவில் இருந்து சுமார் 2ஆயிரத்து 500 பேர் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.