தமிழகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து அவர்களின் பெயரிலேயே போலியான முகநூல், ட்விட்டர் கணக்கை தொடங்கி, கொரோனா நிதி என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது.
காவல்துறையில் கூடுதல் டிஜிபி பொறுப்பில் இருக்கக்கூடிய அதிகாரிகளையே சைபர் கிரைமில் புகார் அளிக்க வைத்த மோசடி கும்பல் குறித்து தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.
கொரோனாவின் பிடியில் நாட்டிலுள்ள பல மாநிலங்கள் சிக்கித் தவித்து வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை சமாளிக்க, நிவாரண நிதியளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்தன. இந்த நிலையில் ஈவிரக்கமின்றி இதை வைத்தே காசு சம்பாதிக்க நினைத்த கும்பல் இதற்காக காவல்துறையின் உயர் பதவிகளில் இருப்பவர்கள், பிரபலங்களை குறிவைத்து அவர்கள் பெயரில் இந்த மோசடியை செய்துள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் கூடுதல் டி.ஜி.பியான ஐபிஎஸ் அதிகாரி ரவி, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகிறார்.
விழிப்புணர்வு சார்ந்து மற்றும் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது பதிவுகளை வெளியிடுவார். இந்நிலையில் கூடுதல் டி.ஜி.பி ரவி பேஸ்புக் கணக்கில் இருந்து அவருடைய நண்பர்கள் பலருக்கும் தனியாக பேஸ்புக் மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது.
அதில் கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு சுமார் 4 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு தனி நபர்களுக்கு வழங்குவதாகவும், அதற்கு முன் பணமாக 40 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியாக அனுப்பினால், அந்த பணம் கிடைக்கும் என அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் கூடுதல் டிஜிபி ரவியான தானும் இதற்காக பணத்தை செலுத்தியிருப்பதாக அந்த குறுஞ்செய்தியில் வந்துள்ளது.
இது தொடர்பாக ஐ.பி.எஸ் அதிகாரியின் நண்பர்கள் சிலர் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு இதுபற்றி தெரிவித்துள்ளார். அதன் பின்னரே கூடுதல் டிஜிபி ரவிக்கு அவருடைய பெயரிலேயே, புகைப்படம் மற்றும் விவரங்களை பதிவு செய்து போலி கணக்கு ஒன்று செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் அவர் புகார் அளித்து விசாரிக்க கூறியுள்ளார்.
அந்த போலி கணக்கு விவரங்களை வைத்து விசாரணை நடத்தியதில் அது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வங்கி கணக்கு என தெரியவந்துள்ளது. இதேபோன்று, தற்போது மதுரை மாநகர காவல் ஆணையரான ஐ.பி.எஸ் அதிகாரி டேவிட்சன் ஆசீர்வாதம் பெயரிலும் போலி கணக்கை தொடங்கி பலரிடமும் இதே பாணியில் பணம் பறித்துள்ளனர்.
இது தொடர்பாக புகைப்படங்களை பயன்படுத்தி போலி கணக்கு மூலம் பணம் பறிக்கும் விஷமிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் ஆசிர்வாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
வட மாநிலத்தை சேர்ந்த இந்த மோசடி கும்பல் ராணுவ அதிகாரிகள் பெயரிலும், பல பிரபலங்கள் பெயரிலும் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் வலை வீசும் இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்