சென்னை அடுத்த மாதவரத்தில் தடையை மீறி மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்க விட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன் தினம் வியாசர்பாடியை சேர்ந்த பகீர் பாஷா என்பவர் மனைவி, குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து காயம் ஏற்பட்டது. இது குறித்து எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்கவிடுபவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், எம்.கே.பி. நகரில், மாஞ்சா நூலில் பட்டம் பறக்கவிட்டிருந்த தினேஷ் குமார் என்பவரை போலீசார் கையும், களவுமாக சுற்றி வளைத்தனர். மேலும், அமேசான் ஆன்லைன் வர்த்தக தளம் மூலம் மாஞ்சா நூல், காற்றாடி வாங்கியதாக தினேஷ்குமார் கூறியதால் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.