இருவாரங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கில் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்ட கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று பூஜ்ஜியமாகியுள்ளது. வீடுவீடாக மூலிகை தேனீர் கொடுத்தது நல்ல பலனை தந்துள்ளதாக சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை எகிறுவதற்கு முக்கிய காரணமாக ராயபுரம், திரு.வி.க நகர், தண்டையார் பேட்டை, தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்கள் இருந்து வருகின்றன.
கோடம்பாக்கம் மண்டலத்தை பொறுத்தவரை கோயம்பேடு மார்க்கெட் அதனை சுற்றியுள்ள சேமாத்தம்மன் நகர் செக்டார் 1,2,3, அய்யப்பா நகர் அவ்வை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரு வாரங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கானோர் தினமும் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாயினர்.
இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்திய கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சித்தமருத்துவர்களுடன் அந்த பகுதிக்கு சென்று வீடுவீடாக தடுப்பு மருந்து வழங்குவதை தொடங்கி வைத்தார். 50 ஆட்டோக்களில் 15 வகையான மூலிகைகள் அடங்கிய சித்த மருத்துவ தேனீர் தினமும் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டது.
அந்த பகுதிகளில் தொடர்ந்து ஒரு வாரம் மூலிகை தேனீர் இலவசமாக வழங்கட்ட நிலையில் அங்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது பூஜ்ஜியமானதாக கூறப்படுகின்றது. இதனால் சித்தமருத்துவர்களின் ஆட்டோக்களை பார்த்தால் அப்பகுதி மக்கள் தாங்களாகவே வீடுகளில் இருந்து வெளியே வந்து மூலிகை தேனீரை வாங்கி பருகுகின்றனர்.
மேலும் கொரோனாவுக்கு எதிராக மூலிகை தேனீர், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி மக்களுக்கு சிறப்பான மருத்துவ பலனை தந்திருப்பதால் சவாலுடன் களமிறங்கிய சித்தமருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
தற்போது ராயபுரம் பகுதியில் நாளுக்கு நாள் கொரொனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் அந்தபகுதி மக்களுக்கு சித்த மருத்துவ தேனீர் விநியோகிக்க அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் கொரோனாவுக்கு மருந்தே கண்பிடிக்காத நிலையில் சித்தமருத்துவத்தில் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்கின்றது என்பதை அலோபதி மருத்துவர்கள் தற்போது வரை ஏற்க மறுத்துவருகின்றனர் என்பதே கசப்பான உண்மை.