சென்னையில் முதன்மையான சாலைகளில் உள்ள சிக்னல்கள் தானியங்கி முறையில் இயங்குவதால் சிக்னல்கள் மாறுவதற்கு வாகன ஓட்டுநர்கள் அதிகநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை, நந்தனம் சிக்னல்களில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் இருக்கின்றனர். அவர்கள் வாகன எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் சிக்னல்களை இயக்குவதால் நெரிசல் ஏற்படாமலும் தாமதமின்றியும் வாகனங்கள் செல்கின்றன.
அதே சமயம் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் இல்லாததால் தானியங்கி முறையில் சிக்னல்கள் இயங்குகின்றன.
ஒரு புறம் வாகனங்களே இல்லாவிட்டாலும் அந்தப் பக்கத்துக்கு வழிவிடுவதற்காக ஒருநிமிடம் வரை மற்ற பக்கங்களுக்குச் செல்லும் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சில வாகன ஓட்டிகளோ தங்களுக்கு சிக்னல் இல்லை என்ற போதும், எதிரில் எந்த வாகனமும் வரவில்லை எனக் கருதி வேகமாகச் செல்லும்போது விபத்து ஏற்படும் சூழலும் நிலவுகிறது.
ஆழ்வார்ப்பேட்டை சி.பி.ராமசாமி சாலை போன்ற போக்குவரத்து குறைவாக உள்ள சாலைகளில் நாள் முழுவதும் தானியங்கி முறையில் சிக்னல் இயங்குவதால் சிக்னல் மாறும் வரை வாகனங்கள் காத்து நின்று செல்ல வேண்டியுள்ளது.
தானியங்கி சிக்னல்கள் இயங்குவது குறித்துச் சென்னை போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு, நான்காம் கட்ட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் பத்தரை மணி வரையிலும், மாலை ஐந்தரை மணி முதல் 7 மணி வரையிலும் போக்குவரத்துக் காவலர்கள் சிக்னல்களை இயக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.