சென்னையில் ஏ.டி.எம் மையங்களுக்கு வரும் முதியவர்களை குறிவைத்து நூதன முறையில் திருடும் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். ஊரடங்கால் துணி வியாபாரம் படுத்துவிட, பழைய திருட்டு தொழிலுக்கு திரும்பி சிக்கிய பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் பிரபாகரன் என்பவர் ஆற்காடு சாலையிலுள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது ஏ.டி.எம்மில் பணம் வராத நிலையில், ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர் உதவுவதாக கூறி பணம் எடுத்து கொடுத்துள்ளார். வீட்டிற்கு வந்த பின்னர் 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வந்ததை பார்த்து அதிர்ந்து போனவர், ஏடிஎம் கார்டை பார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து உதவுவதாக வந்த நபரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், ஏ.டி.எம் மையத்தின் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பழைய குற்றவாளி பார்த்தசாரதி இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்த போலீசார், அவனை பின் தொடர்ந்து கைது செய்தனர்.
இதே பாணியில் திருடியதாக பார்த்தசாரதி மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கனவே 7 வழக்குகள் உள்ளன. ஏடிஎம் மையத்துக்கு வரும் முதியவர்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் பார்த்தசாரதி, முன்னதாகவே ஏ.டி.எம் எந்திரத்தின் நம்பர் பேடில் சிறு குச்சியை செருகி வைத்து விட்டு வந்துவிடுவான்.
முதியவர்கள் யாராவது வந்து பணம் எடுக்க முடியாமல் குழம்பி நிற்கும் போது, ஹெல்மெட் அணிந்து உள்ளே செல்பவன், கவனத்தை திசைதிருப்பி நம்பர் பேடில் செருகப்பட்ட குச்சியை தட்டிவிட்டு பணம் எடுத்து கொடுத்து விடுவான்.
அசந்த நேரத்தில் முதியவரின் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக தம்மிடம் உள்ள போலி கார்டை எடுத்து கொடுத்து விடுவான். இதனை அறியாமல் அவன் உதவியதாக நம்பி நன்றி சொல்லிவிட்டு செல்பவர்களின், ஏடிஎம் கார்டு மட்டுமின்றி, அவர்கள் மூலமே அதன் ரகசிய எண்ணையும் அறிந்து கொள்ளும் பார்த்தசாரதி, பின்னர் அதனை பயன்படுத்தி பணம் எடுத்து கொள்வான்.
இறுதியாக கடந்த ஆண்டு கைதாகி சிறையில் இருந்து வெளியில் வந்தவன்,கார்மென்ட்ஸ் தொழிலில் தனக்குள்ள அனுபவத்தை வைத்து ஆன்லைன் மூலமும், நடைபாதையில் துணி கடை வைத்தும் வியாபாரம் செய்து வந்துள்ளான்.
ஊரடங்கால் அந்த தொழிலும் முடங்கிவிட பழைய திருட்டு தொழிலுக்கு திரும்பியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். முதியவரின் வங்கி கணக்கிலிருந்து திருடிய 50 ஆயிரம் ரூபாயில், 2 மாத வாடகை பணம்16 ஆயிரம் ரூபாயை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்தவனிடம் எஞ்சியிருந்த 25 ஆயிரம் பணத்தையும், 20-க்கும் மேற்பட்ட போலி வங்கி ஏ.டி.எம். கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனி மனித விலகலை கடைப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.