கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டு இருக்கும் நிலையில் வீட்டில் உள்ள புரொஜெக்டர் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் டிரைவ இன் திரையரங்கு போல சுவற்றில் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றது.
வீட்டின் பால்கனியில் இருந்து புதிய படங்களை பார்க்கும் புதுச்சேரி மக்களின் புதுமையான பொழுது போக்கு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகரில் வீட்டுவசதிவாரிய குடியிருப்பு வாசிகள் தான் தங்கள் வீட்டு சுவற்றை அகண்ட திரையாக்கி மாலை நேரத்தை திரை படங்களுடன் பொழுது போக்கிவருகின்றனர்
கொரோனா பரவலை தடுக்க திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டு 45 நாட்களை கடந்து விட்ட நிலையில் தினமும் வீட்டிற்குள் முடங்கி கிடந்து நொந்து போன நிலையில் 250 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்ற குடியிருப்பு வாசிகள் மாலை நேரமானால் நடைபயிற்சிக்கு செல்வதாக சாலைக்கு செல்கிறார்கள்.
இதனை தடுத்து அவர்களை குடியிருப்பிலேயே இருக்க வைக்க குடியிருப்பு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து கங்காசேகரன் என்பவர் தினமும் அகண்ட திரையில் படங்களை திரையிட்டு வருகிறார்
மேல் தளத்தில் வசித்து வரும் கங்காசேகரன் அவரது வீட்டில் இருந்து எதிர்புரம் உள்ள வீட்டின் சுவற்றை அகண்ட திரையாக்கி புரொஜெக்டர் மூலம் படங்கள் திரையிடப்படுகின்றது. இதனை ஏராளமான குடியிருப்பு வாசிகள் மொத்தமாக கூடாமல் அவரவர் வீட்டு பால்கனியில் இருந்தவாரே கண்டுகளிக்கின்றனர்
ஒரு பக்கம் உள்ள குடியிருப்பு வாசிகள் மட்டுமே திரைபடங்களை கண்டு களிக்க இயலும் என்றாலும் இந்த முறையில் படம் பார்ப்பது மன அழுத்தத்தை போக்கும் வகையில் இருப்பதாகவும் மாலை நேரத்தை இனிமையாக்குவதாகவும் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்
வீட்டுக்குள் இருந்து சிடி பிளேயர் மூலம் டிவியில் திரைபடங்களை பார்த்த காலம் போய், வீட்டுக்குள் இருந்த படியே எதிர் வீட்டு சுவரை அகன்ற திரையாக்கி அவரவர் வீட்டில் இருந்தபடியே படங்களை பார்க்கும் இந்த புதுமையான முறை பெரும்பாலான பகுதிகளில் நடைமுறைக்கு வந்தால் திரையரங்குகளுக்கு இனி வேலை இல்லாமல் போய்விடும்.
அதே நேரத்தில் சிடியை வாங்கினால் அதனை தங்கள் வீட்டில் போட்டு பார்ப்பதற்கு அனுமதி உள்ளது. அதனை இப்படி ஊருக்கே திரையிட்டு காட்ட வேண்டுமானால் தக்க அனுமதி பெற வேண்டும். இல்லையேல் வீடியோ பைரஸி சட்டத்தின் கீழ் ஜெயிலுக்கு செல்ல நேரிடும் என்பதும் குறிப்பிடதக்கது.
புதுமையான பொழுது போக்கு என்று, விதியை மீறி படங்களை பொதுவெளியில் திரையிட்டு குடியிருப்பு வாசிகள் தங்கள் பிழைப்பை கெடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சரிதான்.