ஊரே வீட்டுக்குள் முடங்கி கிடக்க ஆம்பூரில் நைட்டி அணிந்த பெண் ஒருவர் பைபாஸ் சாலையில் கையை உயர்த்தியபடி ஆவேசமாக வலம் வந்து அருள்வாக்கு கூறிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கொரோனாவுக்கு அருள் வாக்கு சொன்ன அம்மையார் நாக்கில் சூடம் ஏற்றப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கோவில்கள் எல்லாம் பூட்டப்பட்டுவிட்ட நிலையில் அம்மன் வந்திருப்பதாக அருள்வாக்கு கூறிய நைட்டி போட்ட அம்மையார் இவர்தான்.
ஆம்பூர் பைபாஸ் சாலையையொட்டிய குடியிருப்பு பகுதியில் இருந்து நைட்டியுடன் சாலையில் தலைவிரி கோலமாக புகுந்த பெண் ஒருவர் நாக்கை நீட்டிக் கொண்டு சாலையில் செல்ல அப்பகுதி இளைஞர்கள் செல்போன் கேமராவுடன் அவரை பின் தொடர்ந்தனர்.
ஒரு கட்டத்தில் கையை உயர்த்தியும் நாக்கை துறுத்தியும் ஆவேசமாக மூச்சிறைக்க அருள் வாக்கு சொல்ல தொடங்கினார் அந்த அம்மையார்.
நாட்டிற்குள் பாவிகளின் எண்ணிக்கை பெருகி விட்டதால் கொரோனா மூலம் அவர்களுக்கு பாடம் கற்பிப்பதாகவும், இந்த கொரோனா பாதிப்புக்கள் நீங்க முழுமையாக 7 மாதங்கள் வரை பிடிக்கும் என்றும் அகில இந்திய மருத்துவ கவுன்சில் போல அருள்வாக்கு கூறினார் அந்த அம்மையார்.
அந்தப்பெண்ணை சிலர் தொட்டு தூக்க முயல யாரும் தன்னை தொடக்கூடாது என்று தனி நபர் இடைவெளியுடன் உக்கிரமாக நடந்து கொண்டதால் ஊரே வேடிக்கைபார்க்க ஆரம்பித்தது.
இதையடுத்து அப்பகுதி பெண்கள் சாலையில் ஆடிய சாமியை மலையேற்ற முடிவு செய்து அந்த பெண்ணின் உள்ளங்கையில் சூடம் ஏற்ற எரிந்து கொண்டிருந்த சூடகத்தை பயர் பீடா போல அப்படியே நாக்கில் போட்டு வாயை மூடினார்.
கையில் உற்றப்பட்ட தண்ணீரை குடித்ததும், வேட்டையனிடம் எஸ்கேப் ஆன சந்திரமுகி போல பிளட்பாரத்தில் பொத்தென்று விழுந்தார் அந்த அருள்வாக்கு அம்மையார்.
மக்கள் விழிப்புடன் வீட்டில் இல்லாமலும், தனி நபர் இடைவெளியை பின்பற்றாமலும் வீதியில் சுற்றி திரிந்தால், இந்த அம்மையாரின் அருள் வாக்கு போல, மே 3 ந்தேதிக்கு பின்னரும் கொரோனா ஊடரங்கு தொடரவே செய்யும் என்பதே கசப்பான உண்மை.