அவினாசியில் போலீசாரின் ட்ரோன் கேமராவுக்கு பயந்து ஓடிய இளைஞர்கள் தென்னைமரத்தில் ஏறிப் பதுங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பதுங்கிய பாய்ஸ் பதறி ஓடி பல்பு வாங்கியது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வீட்டில் இருப்புக் கொள்ளாமல் விளையாட்டு மைதானங்களைத் தேடிவந்த மட்டைப் பந்து ஆட்டக்காரர்களை, அவிநாசி போலீசாரின் ட்ரோன் கேமரா ஓட்டப்பந்தய வீரர்களாக்கியது.சல்லி கற்குவியலில் படுத்தவர்கள் பதுங்க இடம் தேடி ஓடி ஒளிந்தனர்.
ட்ரோன் கேமராவுக்கு கண்ணாமூச்சி காட்டிய பலர் ஒளிய இடமில்லாமல் வீடு நோக்கி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டதுஒரு கட்டத்தில் இரு சில்லுவண்டுகள் தென்னை மரத்தில் ஏறித் தப்பிக்க எத்தனிக்க ட்ரோன் அவர்களையும் கச்சிதமாகப் படம்பிடித்தது
சிறிய செடி மறைவில் இருவர் குத்தவைத்து ஒளிந்து விளையாட அவர்களை சுற்றி வந்து கும்மி அடித்தது ட்ரோன் கேமரா.ஒரு கட்டத்தில் கைலியைக் கழற்றி தங்களை மறைத்துக் கொண்டே ஓடியதால் அங்கிருந்த குழிக்குள் விழுந்து விட்டால் போதும் என்று பதறி ஓடினர்.
இன்னும் சிலர் தங்களது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். வீட்டில் இருந்து விலகி இருந்து தனித்து இருந்து கொரோனாவை தடுப்போம் என்பதை உணர்த்த ட்ரோன் கேமராமூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் காவல்துறையினர்.