ராணிப்பேட்டை அருகே ஊரடங்கிற்கு கட்டுப்படாமல் சுற்றியவர்களை பிடித்து விசாரித்த போது, 10 மாதங்களுக்கு முன்பு மது விருந்து வைத்து 3 கூட்டாளிகளை கொன்று புதைத்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடுத்தவர் வாகனத்தை அபேஸ் செய்வதில் நிகழ்ந்த போட்டியால் ஏற்பட்ட கொடூரசம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
ராணிப்பேட்டை அடுத்த சீகராஜபுரத்தில் காவல்துறையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, ஊரடங்கிற்கு கட்டுப்படாமல் வலம் வந்த ஊர் சுற்றி பாய்ஸ் 4 பேர் போலீசிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.
அவர்களில் ஒருவன் தப்பிச்செல்ல 3 பேர் போலீசிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாங்கள் சாதாரண வாகன திருடர்கள் தான் என்றும், தப்பிச்சென்ற தங்கள் பாஸ் ஜெயபிரகாஷ் தான், வழிப்பறி கொள்ளை, ஜெயின்பறிப்பு மற்றும் 3 கொலைகள் எல்லாம் செய்துள்ளார் என்று போட்டு கொடுத்து விட்டனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட வாசு, யுவராஜ், அரவிந்த் ஆகிய 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் ஜெயபிரகாஷ், இளங்கோ ஆகியோரை பிடித்து விசாரித்த போது சென்னை திருவொற்றியூர் பகுதியில் போலீசுக்கு இன்பார்மர்களாக செயல்பட்ட சேக் முகமது உள்ளிட்ட 3 கூட்டாளிகளை கொலை செய்து புதைத்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
செயின்பறிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயபிரகாசிடம் இளங்கோ நட்பாக பழகியுள்ளார்.
மாதத்தில் இருமுறை வாகனம் திருடி மாட்டிக் கொள்ளும் இளங்கோ, தன்னை யாரோ போலீசில் மாட்டிவிடுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அடுத்தவர் வாகனத்தை அபேஸ் செய்து சென்ற தகவல் தெரிந்த கூட்டாளி யார்? விசாரித்துள்ளான். அப்போது, தன்னுடைய கூட்டத்துக்கு போட்டியாக வண்டி களவாடும் விழுப்புரம் சூர்யா, ஆசிக் அகமது, நவீன் ஆகியோர் என்பதை கண்டறிந்துள்ளனர்.
இதனை தெரிவித்ததால் இனி போலீசுக்கு தகவல் தெரியாமல் இருக்க வேண்டுமானால், அவர்களை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கூட்டாளிகளுடன் பங்கேற்ற இளங்கோ தலைமையிலான கும்பல், மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறி சூர்யா, நவீன், ஆசிக் அகமது ஆகியோரை, ராணிபேட்டை ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்குள்ள பனந்தோப்பு காப்புக்காட்டில், வைத்து அவர்களுக்கு மது ஊற்றிக்கொடுத்து போதை ஏறிய நிலையில் அவர்களை அடித்து கொலை செய்துள்ளனர். சூர்யா, ஆசிக் அகமது, நவீன் ஆகியோரது சடலங்களை முட்புதர் நிறைந்த ஆற்றங்கரையில் குழித்தோண்டி புதைத்து விட்டுத் தப்பியதாக போலீசில் வாக்கு மூலம் அளித்தனர்.
இதையடுத்து, அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து 3 கூட்டாளிகளின் சடலத்தையும் தோண்டி எடுத்த காவல்துறையினர் இந்த கொலை தொடர்பான தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சூர்யாவின் மனைவி மட்டுமே தனது கணவனை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். மற்ற இருவரது வீட்டிலும் எந்த ஒரு புகாரும் இல்லை.
வீட்டிற்கு அடங்காமல் எங்கே செல்கிறோம், என்ன செய்கிறோம் என்று சுற்றி திரிந்ததால், அவர்கள் கொல்லப்பட்டது கூட குடும்பத்தினருக்கு தெரியவில்லை என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர்,கூடா நட்பு என்றும் கேடாய் முடியும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று என்கின்றனர்.