சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்து கொரோனா தொற்றுக்குள்ளான டிக்டாக் பொண்ணு 28 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து உள்ளார். கொரோனாவோடு டிக்டாக்கையும் கைவிட்டு வீடுதிரும்பும் பீணிக்ஸ் பெண் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை வேளச்சேரி பீனீக்ஸ் மாலில் பணிபுரிந்த போது கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண் பூஜா என்பவர் அரியலூர் சென்ற நிலையில் அங்குள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருக்கும் போதே செல்போனில் டிக்டாக் செய்து வெளியிட்டார்
இவரது செல்போனை வாங்கி டிக்டாக் சேட்டைகளை வேடிக்கைப் பார்த்த 3 சுகாதார பணியாளர்களுக்கு வேலை பறிபோனதோடு தனிமையிலும் வைக்கப்பட்டனர்.
டிக்டாக் செய்வதால் மனசு ரிலாக்ஸ் ஆகும் என்று நினைத்து வில்லங்கத்தை வரவழைத்த பூஜாவுக்கு மருத்துவர்கள் தக்க அறிவுரை வழங்கியதை அடுத்து டிக்டாக்கை கைவிட்டு ஓவியங்கள் வரைந்தும், கவிதைகள் எழுதியும் பொழுது போக்கி உள்ளார்.
கடந்த 28 நாட்களாக தனிமை சிகிச்சையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த பூஜாவுக்கு அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 பரிசோதனைகளிலும் கொரோனா பாதிப்பு நீங்கியது உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவை நம்பிக்கையுடன் வென்ற சிங்கப்பெண்ணாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் இந்த பீனீக்ஸ் பூஜா..!
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பூஜாவுக்கு பூங்கொத்து , பரிசு பொருட்கள் கொடுத்து மருத்துவர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தினர் சுகாதாரதுறையினர் ஆம்புலன்சில் வழியனுப்பி வைத்தனர்.
டிக்டாக்கில் கொரோனா தனிமை சிகிச்சையை நம்பிக்கையுடன் எதிர் கொண்டால் எளிதாக வெல்லலாம் என்று நம்பிக்கையூட்டிய பூஜா, தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்தார்
தான் மருத்துவமனையில் இருந்து கொரோனாவை மட்டுமல்ல டிக்டாக் செய்வதையும் கைவிட்டு செல்வதாக தனது கடைசி டிக்டாக் வீடியோவில் தெரிவித்துள்ளார் பூஜா..!
வீட்டுக்கு சென்றோமா..? ஒழுங்காக பெற்றோர் பேச்சை கேட்டு நடந்தோமா..? என்று அடக்கத்துடன் இருந்தால் சீனாவின் கொரோனா வைரஸ் மட்டுமல்ல அதைவிட மோசமான சமூக தொற்றான டிக்டாக் வைரஸையும் நாம் விரட்டி அடிக்கலாம்..! என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அதே நேரத்தில் பூஜா வீட்டுக்கு அனுப்பபட்டதால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை பூஜியமாகி உள்ளது குறிப்பிடதக்கது.