சென்னை கோடம்பாக்கம் கில் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி பூட்டப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான வகுப்புகள் வாட்ஸ் ஆப் மூலம் தொடங்கி உள்ளன. வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்களிடம் பாடம் கற்கும் மாணவர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தங்கள் வகுப்புகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில் கோடம்பாக்கம் கில்நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வருகின்றனர்.
வீட்டில் இருந்த படியே வாட்ஸ் ஆப் உதவியுடனும், ஆன்லைனிலும் ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்படுகின்றது. பள்ளி சீருடையுடன் பொறுப்பாக வீட்டிலேயே அமர்ந்து குணமாக பாடம் படிக்க தொடங்கி இருக்கின்றனர் குட்டீஸ்..!
காலையில் இருந்து சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்களுக்கு, வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகின்றது. வகுப்புத் தேர்வும் வைக்கப்படுகின்றது. அனைத்தும் வாட்ஸ் ஆப் வாயிலாகவே செய்யப்படுகின்றது. குழந்தைகள் பள்ளியில் இருப்பது போலவே நினைத்து பொறுப்பாக பாடம் படித்து வருகின்றனர்.
2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது வீட்டில் இருந்தே ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடத்தை முடித்து அதனை வாட்ஸ் ஆப்பில் போட்டோவாக எடுத்து பதிவிடுகிறார். அதனை ஆசிரியை திருத்தி மீண்டும் அனுப்பி வைக்கிறார்.
திடீர் விடுமுறையால் எந்தவகையிலும் தங்கள் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடகூடாது, அதே நேரத்தில் தரமான கல்வி அவர்களது வீடுகளுக்கே சென்று சேரவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடைப்படையில் வகுப்புகள் தொடங்கி நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதாக பெற்றோர் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வே இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், 11 ஆம் வகுப்புக்கு ஒரு பாடத்திற்கும், 10 ஆம் வகுப்பிற்கும் தேர்வு நடக்குமா? நடக்காதா ? என்ற குழப்பத்துடன் மாணவர்கள் தங்கள் விடுமுறை நாட்களை கழித்து வருவது குறிப்பிடதக்கது.