திருவள்ளூர் அடுத்த புட்லூரில் சாலையை கடந்த நாகப்பாம்பை பிடித்த இளைஞர் ஒருவர் அதன் விஷப்பல்லை பிடுங்கி எடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஊரடங்கிற்கு அடங்காத ஸ்னேக் பாபுவின் அட்டகாசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் ஊரடங்கால் மனிதர்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் வலம் வந்த உள்ளூர் நாகப்பாம்பு ஒன்று, காக்களூர் பகுதியில் வேலைபார்த்து வரும் மதுரையை சேர்ந்த ஸ்னேக் பாபுவான யுவராஜிடம் சிக்கியது..!
வித்தை காட்டிட்டு விட்டுவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் நாகப்பாம்பை மல்லாக்க படுக்க வைத்து விஷபற்களை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிந்து விட்டார்..!பல்லை பிடுங்கிய பின்னரும் நாகப்பாம்பை வைத்து விளையாட்டு காட்டுவதாக கூறிய யுவராஜ், அதனை வளர்க்க போவதாக கூறி கையோடு எடுத்துச் சென்று விட்டார்
மதுரையில் தனது வீட்டில் மேலும் இரண்டு பாம்புகளை வளர்த்து வருவதாக கெத்தாக தெரிவித்த ஸ்னேக்பாபு யுவராஜுக்கு, நாளை நடக்க போகும் சம்பவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் சோகம்..!
பாம்புகளை அடைத்து வைத்து வளர்ப்பதும், காட்சிப்படுத்துதலுமே தண்டனைக்குரிய குற்றம்..! அப்படியிருக்க பாம்பை பிடித்து... பல்லை பிடுங்கி... கொஞ்சம் ஓவராகவே நடந்து கொண்டுள்ளார் நம்ம ஸ்னேக் பாபு..!
ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் அடங்கி இருக்க, காட்டுக்குள் ஒருவரும் சிக்காததால், கடும் வறட்சியில் காணப்படும் வனத்துறை அதிகாரிகளிடம் வலியச்சென்று சிக்க உள்ளார் ஸ்னேக் பாபு யுவராஜ்..!
பாம்பும் நம்மை போன்ற உயிரினம் தான் அதற்கும் பசி, கோபம், வலி எல்லாம் உண்டு, நம்மை ஒருவர் பிடித்துவைத்து பற்களை ஒவ்வொன்றாக வெடுக்கென்று பிடுங்கி எறிந்தால் எவ்வளவு வலியும் வேதனையும் இருக்கும் ? என்பதை உணர்ந்தாவது இது போன்ற விபரீத செயலில் ஈடுபடுவதை கைவிடுங்கள்..!இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல அனைத்துயிர்களுக்குமானது..! என்பதை உணருங்கள்..!