தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஆடைகளின்றி சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவருக்கு ஊர்காவல் படையை சேர்ந்த இருவர் ஆடைகளை அணிவித்து அனுப்பிய மனிதநேய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
ஊருக்கு மட்டும் இல்லை, மானத்திற்கும் காவல் என்பதற்கு சாட்சியான சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய தேவைக்களுக்காக வெளியே வருவதால், மதியம் 1 மணிவரை வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமகவே காணப்படுகின்றது.
இந்த பகுதியில் ஆடைகளின்றி பிச்சை எடுத்தபடி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றி வந்தார். வீதியில் சென்ற பலரும் அவரை வேடிக்கையாக பார்த்து சென்ற நிலையில் , அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்காவல்படை வீரர்கள் இருவர், அந்த மன நலம் பாதிகப்பட்டவரை வேதனையோடு பார்த்தனர். உடனடியாக, தங்களிடம் இருந்த அரைக்கால் சட்டை ஒன்றை எடுத்து வந்து அந்த இளைஞருக்கு அணிவித்தனர்
ஊருக்கு மட்டும் இல்லீங்க உங்களோட மானத்துக்கும் நாங்கத்தான் காவல் என்று தங்களது மனித நேய செயல்பாட்டால் நிரூபித்தனர். அந்த ஊர்காவல்படை வீரர்கள்..! சம்பளம் குறைவு, நிலையான பணியில்லை என்றாலும் இது போன்ற சமூக அக்கறை உள்ளவர்களின் செயல்பாட்டால் ஊர்க்காவல்படை உயர்ந்து நிற்கிறது. இந்த காட்சிகளை செல்போன் காமிராவில் படம் பிடித்த ஒருவர் ஊர்காவல்படை வீரர்களின் சேவை வெளி உலகத்திற்கு தெரியும் வகையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதே போல பல்லடத்தில் பெண் தூய்மை பணியாளரை போற்றும் விதமாக அவரது பாதத்திற்கு பூஜை செய்த நிகழ்வு அனைவரையும் வியக்க வைத்துள்ளதுசேலம் மாவட்டம் எடப்பாடியிலும் தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து காய்கறிகளுடன் புத்தாடைகளை வழங்கி ஒரு குடும்பத்தினர் கவுரவித்தனர்.பொதுவாக வீட்டில் உள்ளவர்களால், குப்பைகாரங்க என்று அழைக்கப்படும் தூய்மை பணியாளர்கள் மட்டும் இல்லையென்றால் ஊர் மட்டுமல்ல நமது வீடும் நாறிவிடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
வந்த நோய்க்கு மருத்து கொடுப்பது மருத்துவர்களின் பணியாக இருந்தாலும் குப்பை கூளங்களை அகற்றி வீதியை சுத்தப்படுத்தி நோய்வராமல் காப்பதே இந்த கடமை தவறாத தூய்மைபணியாளர்கள் தான்..! என்பதை நம்மவர்கள் உணர தொடங்கி இருக்கின்றனர்.
மருத்துவர்களுக்கு இணையாக அவர்களும் போற்றப்பட வேண்டியவர்கள் தான் என்பதை கொரோனா போன்ற கொடிய வைரஸ் கிருமிகள் தான் நம்மவர்களுக்கு உணர்த்திவருகின்றது. அதே நேரத்தில் கொரோனா பரவுதலை தடுக்க அவர்கள் வீதியில் இருப்பதால், ஊரடங்கை மதித்து மக்கள் வீட்டிற்குள் அடங்கி இருப்பதே சமூகத்திற்கு செய்கின்ற மிகப்பெரிய நன்மை என்பதை அனைவரும் உணரவேண்டும்