ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊரடங்கை மீறி கொரோனாவை விரட்டுவதாக கூறி, ஊர் ஊராக குட்டியானையில் கும்பலாக சுற்றி ஜெபக்கூட்டம் நடத்திய போலீஸ்காரர் மனைவி கைது செய்யப்பட்டார். செய்வினையால் சிக்கிய ஆசிரியையின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு....
ஈரோடு மாவட்டம் பவானி அருகே குறிச்சி வாய்க்கால் மேடு பகுதியில் மேசியா என்ற பெயரில் ஜெப வீடு நடத்தி வருபவர் ராணி. இவர் செல்லிக் கவுண்டனூர் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜெயராமன் பர்கூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைமை ஆசிரியை ராணி கொரோனா போன்ற கொடிய நோய்களை ஒழிக்க கூட்டு ஜெபம் நடத்த, குட்டியானை என்று அழைக்கப்படும் டாட்டா ஏஸ் வாகனம் ஒன்றை எடுத்துக்கொண்டு பெரிய குரும்பபாளையம் காலனி பகுதிக்கு டிரம்ஸ் மேளத்துடன், ஜெப பாடல்களை பாடிக்கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.
அப்போது பெரிய குரும்பபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஜெப கோஷ்டியை தடுத்து நிறுத்தி, சமூக விலகல் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் 144 தடை உத்தரவு உள்ள காலத்தில் கும்பலாக 10க்கும் மேற்பட்ட ஆட்களை கூட்டிக்கொண்டு சரக்கு ஆட்டோவில் செல்லலாமா என ராணியிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஊருக்குள் ஒரு குடும்பத்துக்கு சுகம் தருவதற்கு ஜெபக்கூட்டம் நடத்தபோவதாக அடம் பிடித்தவர்களை அப்பகுதி மக்கள் எச்சரித்தனர்.
தான் போலீஸ்காரர் மனைவி என்ற தோரணையில் பதிலுக்கு பதில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பவானி போலீசார், சரக்கு வாகனத்தில் வந்தவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தினர்.
தடையை மீறி மத ஜெபம் செய்யச் சென்றதாக ராணி உள்ளிட்ட 7 பேர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் , 144 தடையுத்தரவு காலத்தில், அரசு உத்தரவை மீறி மதப் பிரச்சாரத்திற்கு கூட்டமாக அழைத்துச் சென்றதாக மேசியா ஜெபக்கூடம் நிர்வாகியும் தலைமை ஆசிரியையுமான ராணி மற்றும் ஓட்டுநர் சுப்பிரமணி இருவரையும் கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கடவுளர்கள் எல்லாம், நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். முடிந்தால் அவர்களுக்கும், அரசுக்கும் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதைவிடுத்து கும்பலாக வெளியே சுற்றி தங்களுக்கு தாங்களே செய்வினை வைத்துக் கொண்டால், இப்படி கம்பி எண்ணும் நிலை தான் ஏற்படும் என்பதை சம்பந்தபட்டவர்கள் உணர வேண்டும்..!