ஊரடங்கிற்கு கட்டுப்படாமல் ஊர் சுற்றுவதில் ஆண்களுக்கு போட்டியாக இரு சக்கர வாகனத்தில் வலம் வந்த இரு இளம் பெண்களுக்கு உறுதி மொழி தண்டனை வழங்கப்பட்டது. உடற்பயிற்சி தொடங்கி தவளை ஓட்டம் வரை கற்றுக் கொடுக்கும் காவல்துறையின் சிறப்பு கவனிப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர் போல வருமா ? என்ற நினைப்பில் அடங்க மறுக்கும் கால்களை கொண்ட காளையர்கள் மட்டுமல்ல கன்னிகளும் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக்கி வருகின்றனர்.
சென்னை பாடியில் வாகன சோதனையின் போது சிக்கிய இரு பெண் புள்ளீங்கோக்களுக்கும் பாரபட்சமில்லாமல் வெயிலில் நின்று கொரோனா எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கும் தண்டனை வழங்கப்பட்டது..!
பட்டாபிராம் பகுதியில் ஊரடங்கை மீறி வீதிகளில் வீனாய் சுற்றியவர்கள் வெயிலில் கறுத்து போய்விடக்கூடாது என்று கருத்தாக பேசி அழைத்து வந்த போலீசார் உற்சாகமாக உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்தனர்.
மாங்காடு போலீசாரிடம் சிக்கிய அடங்கா மாப்பிளைகளுக்கு சிக்ஸ் கார்டு டேபிள் உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்கப்பட்டது.
ஆவடியில் கொரோனா குறித்த அச்சமின்றி பொன்மானை தேடி ஊர்வலமாக வந்து போலீசிடம் சிக்கிய சிறுத்தைகளுக்கு ஒற்றைக்கால் வைத்தியம் அளிக்கப்பட்டது.
நசரத்பேட்டை பஜாரில் கொரோனா குறித்த உஷார் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் சுற்றியவர்களை, வளைத்த போலீஸ் அவர்களை வித விதமாக தண்டனைகள் வழங்கி கவுரவப்படுத்தினர். முதலில் தவளை ஓட்டம் கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்னர் அனைவரும் பொறுப்பாக நின்று கொரோனா ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அதே போல பூந்தமல்லி சாலையில் அமைந்தகரை பகுதியில் சீனப்பயணி யுவான்சுவாங் போல சுற்றி வந்த ஊர் சுற்றிகளுக்கு குணமா , எடுத்துச் சொல்லி தோப்பு கரணம் போடச்செய்ய வைத்து மரியாதை அளிக்கப்பட்டது.
தடிகளும் முரட்டு அடிகளும் இன்றி புத்திச்சொல்லும் போலீஸ் பொறுமை இழப்பதற்கு முன்பாக வீட்டிற்குள் முடங்கிக் கொள்வது ஊர் சுற்றி பாய்ஸ்களுக்கு நல்லது இல்லையேல் வாகனத்தை பறிகொடுத்து விட்டு குற்றம் புரிந்தவன்... என்று புலம்பும் நிலை வந்துவிடும் என்று எச்சரித்துள்ளது காவல் துறை..!
இருந்தாலும் ஊரடங்கின் போது கூட வாகன நெரிசலால் மூச்சு திணறியது பாடி மேம்பாலம்..!
இதனை பார்த்தால் சமூக இடைவெளியை பின்பற்ற மறுத்து அடங்க மறுப்பவர்களை அடங்க வைக்க இதைவிட சிறப்பாக காவல்துறையினர் யோசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..!