வட மாநிலங்களில் இருந்து லாரிகள் வரவில்லை என்று சென்னையில் மிளகாய் வத்தலை இருமடங்கு விலை வைத்து வியாபாரிகள் விற்றுவரும் நிலையில், தாங்கள் விளைவித்த மிளகாய் வத்தலை குறைந்தவிலைக்கு வாங்கிச்செல்வதாக விளாத்திக்குளம் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொள்ளை வியாபாரிகளின் முகமூடி கிழிந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
வட மாநிலங்களில் இருந்து லாரிகள் வரவில்லை.அதனால் சென்னைக்கு தேவையான மளிகை பொருட்கள் கிடைக்கவில்லை.
மிளகாய் வத்தலுக்கு கடுமையான தட்டுப்பாடு, என்று விதவிதமான காரணங்களை அள்ளிவிடும் மொத்த வியாபரிகள் சிலர்,150 ரூபாய்க்கு விற்று வந்த காய்ந்த மிளகாயை கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி 250 ரூபாய் என கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்த்தி விற்று வருகின்றனர்.
லாரி வரவில்லை என்றால் மிளகாய் வத்தல் எங்கிருந்து வந்தது ? என்ற கேள்வி எழுந்தாலும், வேறு வழியில்லாமல் தங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு கொஞ்சமாக வாங்கிச் செல்கின்றனர் மக்கள்.
இந்த நிலையில் காய்ந்த மிளகாய் வியாபாரிகளின் களவாணித்தனம் தமிழக விவசாயிகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
தமிழகத்தில் அதிகமாக மிளகாய் சாகுபடி செய்யப்படும் இடங்களில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியும் ஒன்று. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பல நூறு ஏக்கரில் மிளகாய் பயிர் செய்துள்ளனர்.
கடந்த மாதம் வரை 100 கிலோ எடை கொண்ட காய்ந்த மிளகாய் 13 ஆயிரம் ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி தற்போது எட்டு ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே தரமுடியும் என்றும் இல்லையெனில் காய்ந்த மிளகாய் வேண்டாம் என்றும் வியாபாரிகள் கறாராக கூறி ஒதுக்குவதாக வேதனை தெரிவிக்கின்றார் மிளகாய் விவசாயி மாரீஸ்வரன்.
கடந்த ஒருவாரமாக வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வராமல் புறக்கணித்ததால், அரசு எப்படியும் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் தங்களது தோட்டங்களில் பழுத்த மிளகாயை பறித்து அவற்றை சேமித்து மிளகாய் வத்தலுக்கு காய வைத்து வருகின்றனர் விவசாயிகள்.
100 கிலோ எடை கொண்ட காய்ந்த மிளகாயை 8 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தால், தாங்கள் கொடுத்த பறிப்பு கூலி கூட தங்களுக்கு கிடைக்காது என்று தவித்து நிற்கின்றனர் நம்ம ஊரு விவசாயிகள்.
இதன் மூலம் வட மாநிலங்களில் இருந்து லாரிவரவில்லை, விலை உயர்ந்துவிட்டது என்று வியாபாரிகள் கலர் கலராய் அளந்து விட்ட கதையும் அம்பலமாகியுள்ளது.
இரவு பகலாக பாடுபட்டு விளைவித்த காய்ந்த மிளாகாயுடன் தமிழக விவசாயிகள் காத்திருக்க, அடிமாட்டு விலைக்கு காய்ந்த மிளகாயை கேட்டு வயிற்றில் அடிப்பதோடு, இருக்கும் மிளகாயை கொள்ளை விலைக்கு மக்களுக்கு விற்பது என்னவிதமான வியாபார யுக்தி ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனவே தமிழக அரசு காய்ந்த மிளகாய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து, அதனை அரசே கொள்முதல் செய்து நியாயமான விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.