நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் கோவிலுக்குள் அமர்ந்திருந்த கும்பலுக்கு நோய்தீர குறி சொன்ன பூசாரிக்கும், குறி கேட்கவந்த பக்தர்களுக்கும் போலீசார் குச்சியால் குறி சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு இன்பமாக இருக்கும் என்று தீர்க்கதரிசனம் சொன்னவரின் வாக்கு பொய் வாக்கான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
இவரை போலவே 2020 ஆம் ஆண்டு இன்பத்தை கொடுக்கும் என்று தீர்க்க தரிசனம் சொன்னவர்களின் வாக்கை பொய்யாக்கி, போதும் போதும் என்கிற அளவுக்கு பலத்த அடிகளுடன் கொரோனா என்ற மீளாத் துன்பத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றது இந்த ஆண்டு..!
ஊரடங்கு அமலுக்கு வந்தாலும் வந்தது, ஊருக்குள் என்ன தான் நடக்கின்றது , நாலு எட்டு பார்த்துட்டு வந்து விடுவோம் என்று புறப்பட்ட பலர், விழுப்புண்ணுடன் வீடு திரும்பும் நிலை நாடு முழுவதும் தொடர்கிறது.
வட மாநிலங்களில் முதலில் சிக்கும் வாகன ஓட்டிக்கு நெற்றியில் திலகமிட்டு போலீசார் சிறப்பாக பூஜை செய்வதால் வாகன ஓட்டிகள் பேயடித்தது போல் ஓட்டம் எடுக்கின்றனர். அதே போல தமிழகத்தில் கோவிலில் கும்பலாக அமர்ந்து குறிசொன்ன பூசாரி ஒருவக்கு போலீசார் குச்சியால் குறி சொன்ன சம்பவம் அரங்கேறி உள்ளது
கோவிலில் சுண்டல் கொடுப்பது போல வரிசையாக ஒவ்வொருவருக்கும் பாரபட்சமின்றி, கணக்கு வாத்தியார் போல குச்சியால் குறிசொன்னார் காவல் அதிகாரி ஒருவர்
பூசாரிக்கு அடுத்த ரவுண்டு குறி சொல்ல தேடிய போது,அடி விழுந்த வேகத்தில் பூசாரி அங்கிருந்து ஓடிவிட்டது தெரியவந்தது
கூட்டமாக சேர்ந்தாலோ அருகில் நின்று இருமும் போதோ, எளிதில் கொரோனா நோய் தொற்று பரவி விடும் என்பதால் தான் மக்களின் நலன் கருதியே சற்று கடினமான கணக்கு பாடம் எடுக்கும் நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டுள்ளனர்
போலீசுக்கு கட்டுப்படாமல் ஆட்டம் காட்ட நினைத்தால் தமிழகத்திற்கு துணை ராணுவம் வரவழைக்கப்படும், அப்போது இப்படி சாலையில் நடமாட முடியாது..! ஆமை போல தவழ்ந்து தான் செல்ல வேண்டும்..!
இல்லையென்றால் நீங்கள் ஹாயாக வலம் வரும் வாகனத்தை குத்தவைத்து தூக்கி செல்லும் நிலை ஏற்படும்..!
கோவையில் போலீஸ் அடிப்பதை பார்த்து உந்துதலான சமூக சேவகர் ஒருவர், இரு சக்கர வாகனத்தில் சாகசம் காட்டிய இரு புள்ளீங்கோக்களை மறித்து கம்பால் அடிக்க , பதிலுக்கு சமூக சேவகர் மீது கல்வீச்சில் ஈடுபட்டது அந்த புள்ளீங்கோ, உஷாரான சமூக சேவகர் கொடுத்த அடியில் தம்பிக்கு உடம்பெல்லாம் பட்டாசு வெடித்தது..!
ஊரடங்கை காரணம் காட்டி தனி நபர்கள் எல்லாம் இது போல கையில் தடி எடுத்து தாக்க தொடங்கினால் நிலைமை விபரீதமாகி விடும்...! என்பதையும் போலீசார் உணரவேண்டும்.
அதே நேரத்தில் வீட்டில் அடங்க மறுத்து வீதியில் சுற்றித்திறிந்தால் சென்னை மணலியில் கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக 108 ல் அழைத்து செல்லப்பட்ட இந்த இளைஞரை போல, நோய் தொற்றுக்கு ஆளாகி துணைக்கு வரகூட ஆளில்லாமல் தனித்து விடப்படுவீர்கள் என்று எச்சரிக்கின்றனர் சுகாதாரதுறையினர்..!
வீட்டிலேயே குடும்பத்துடன் அடங்கி இருங்கள், உங்களுக்கும் உங்களை சார்ந்தோருக்கும் அதுதான் நல்லது..!