தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் கொரோனா குறித்த எந்த விழிப்புணர்வும் இன்றி கும்பலாக குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். மீனுக்கு விரித்த வலையில் மீனவர்கள் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
நாடு முழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கும்பலாக சேர்வதாலும், கையால் தொடுவதாலும் எளிதாக கொரோனா பரவும் விபரீதம் உள்ளதால் விலகி இருக்க சுகாதாரதுறை அறிவுறுத்தி உள்ள நிலையில் நகர்புற சந்தைகளிலும், சில கிராமப்புறங்களிலும் அடங்கா மனிதர்கள் அச்சமின்றி ஒன்று கூடி வலம் வருகின்றனர்.
மளிகைகடைக்கு முன் நிற்பது வருவாய்துறை அதிகாரிகள் என்பதை கூட விசாரிக்காமல் விளாசிவிட்டு மன்னிப்பு கேட்கும் கேரள போலீசுக்கு, விசாரித்து விழிப்புணர்வு வைத்தியம் சொல்லும் நம்ம ஊரு போலீஸ் ஒஸ்த்திதான்...!
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை கிராமத்தில் குளம் ஒன்றில் 5 பேர் ஒன்று சேர்ந்து மீனுக்கு வலைவிரித்து கூட்டாக தண்ணீரை கலக்கி கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினரை கண்டதும் தண்ணீர்க்குள் மூழ்கி மறுகரை சென்று தப்பிக்க முயன்றனர்.
ஆனால் அவர்களை விட வேகமாக இருந்த காவல்துறையினர் மறுகரையில் 5 பேரையும் மடக்கினர். மீனுக்கு வலை விரித்த 5 பேரும் போலீசிடம் வசமாக சிக்கிக் கொண்டனர்
கொரோனா வைரஸ் குறித்து போலீசார் கேட்ட கேள்விக்கு, அப்படி ஒரு மீனே குளத்தில் இல்லை என்பது போல அந்த பஞ்சமீனவர்களும் விழித்தனர்.
இதையடுத்து கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கிய காவல்துறையினர், பஞ்சமீனவர்களையும், பஞ்சமில்லாமல் தோப்புக்கரணம் போட வைத்தனர்.
கொரோனா ஊரடங்கு நம் நலணுக்கானது என்பதை உணர்ந்து கால் அடக்கத்துடன் வீட்டில் இருக்காமல், சாலையில் கும்பலாக சுற்றி திரிந்து விளையாடி பொழுதை கழித்தால், மக்குபாய்ஸ் போல தோப்புக்கரணமும், குரங்குகளை போல குட்டிகரணமும் அடிக்க வேண்டி வரும்
இந்த பொறுப்பற்ற நபர்களால் கொரோனா பரவுவதையும் தடுக்க இயலாமல் போய்விடும் என்பதே கசப்பான உண்மை..!