சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் கொரோனா விழிப்புணர்வு இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்களுக்கு காய்கறி- பழங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் கோயம்பேடு சந்தை முக்கிய பங்காற்றி வருகிறது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நள்ளிரவு முதல் லாரிகள்,வேன்களில் வந்திறங்கும் காய்கறிகள், பழங்களை வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகாலையிலேயே குவிந்து விடுவார்கள்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருள் என்பதால் காய்கறி மற்றும் பழங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் இந்த தடுப்பு நடவடிக்கைகள் பெயரளவுக்கு செயல்படுத்தப்படுவதாக புகார் கூறப்படுகிறது. காய்கறிகளை விற்பனை செய்வோர், தொழிலாளர்கள் பெரும்பாலும் முக கவசம் அணியவில்லை என்றும், சானிடைசர் உள்பட கிருமி நாசினிகளை பயன்படுத்துவதில்லை எனவும் அங்கு செல்வோர் கூறுகின்றனர்.
கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏதுமின்றி காய்கறிகளை இறக்கும் தொழிலாளர்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காய்கறிகள் வாங்க வரும் மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று வாங்கும் வகையில் வட்டம் போடப்பட்டுள்ளது. தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முழுமையாக தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.