கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் முகக் கவசங்களை போட்டிபோட்டு வாங்கும் நிலையில், கண்கள் வழியாகக் கூட உடலுக்குள் நுழையக் கூடிய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இருமல், தும்மல் இருந்தால் மட்டுமே மாஸ்க் அணியுங்கள், மாஸ்க் அணிவது, அடிக்கடி கை கழுவும் பழக்கம் இரண்டையும் சேர்த்து பின்பற்றும்போதுதான் பயன் கிடைக்கும், ஆரோக்கியமான நபர்கள், கொரோனா தொற்று உள்ள நபரை கவனித்துக் கொள்வதாக இருந்தால் மட்டுமே மாஸ்க் அணிந்தால் போதும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மாஸ்க்குகள் பாதுகாப்பு கவசமாக செயல்படும் என்றே ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன, ஆனால் மாஸ்க் அணிந்து ஊருக்குள் சுற்றிவருபோது அதனால் பெரிய பயன்கள் ஏதுமில்லை, அதாவது அறைகளில் பயனளிக்கும் அளவிற்கு மாஸ்க்குகள் திறந்த வெளிகளில் பயனளிப்பதில்லை என்றும் மருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இருமல், தும்மலில் தெறிக்கும் நீர்த்திவலைகளை மாஸ்க் தடுத்துவிடும், வெளியில் சுற்றித் திரியும்போது வைரஸ் உள்ள காற்று நீர்த்திவலைகள் மாஸ்க் வழியாக நுழையக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று கூறும் நிபுணர்கள், ஈரமாகிவிட்டதாக உணரும்போது, மாஸ்க்குகளை அகற்றிவிட வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
மாஸ்க் அணியும்போது மூக்கு, வாய் ஆகியவற்றை சேர்த்தே மூடியிருக்க வேண்டும், இடைவெளி இருக்கக் கூடாது, மாஸ்க்கை அடிக்கடி தொடக் கூடாது,
மாஸ்க்கை கழற்றும்போது பின்புறமாகவே அகற்ற வேண்டும், கழற்றிப்போடும் மாஸ்க்குகளை மூடப்பட்ட குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
துணியால் ஆன சூடான நீரில் மாஸ்க்குகளை துவைக்கலாம், மெடிக்கல் மாஸ்க்குகளை அப்படி செய்யக்கூடாது, மாஸ்க்குகளை துவைத்து பயன்படுத்தும்போது அதன் வடிகட்டும் திறன் மிகவும் குறைந்துவிடும் எனக் குறிப்பிடும் நிபுணர்கள், துணியால் ஆன மாஸ்க்குகளை பயன்படுத்தும்போது, அதிக நோய்த்தொற்று அதிகரிப்பதற்கு வித்திட்டதாக, 2015ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றை சுட்டிக்காட்டுகின்றனர்.
மாஸ்க் அணியும்போது அதை நன்கு வசதியாக அணிந்து கொள்ள வேண்டும், கோணலாக அணிந்துவிட்டு, அதை அடிக்கடி சரிசெய்யும்போது முகத்தில் கைபடுவதற்கான வாய்ப்பு அதிகமாகி விடும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.