கேரளம் மற்றும் ஈரோட்டில் டாஸ்மாக்கில் முண்டியடிக்கும் குடிமகன்களால் கொரோனா பரவலை தடுக்க கோடு போட்டு மது வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.
இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன், கொரோனா நீயும் வரக்கூடாது ... என்று டீல் போட்டு குடிமகன்கள், பால்வாடி பாப்பாக்கள் போல..., குணமா ... ,வரிசை கட்டி நிற்கின்றனர்.
அதே நேரத்தில் தலை நகர் சென்னையில் குடிப்பதற்கு மனமிருந்தால் கொரோனாவை மறந்து விடலாம் என்று முண்டியடிக்கும் அலட்சியமான நிலைதான் உள்ளது.
இன்னும் சில மதுக்கடைகளில் பார்கள் மூடப்பட்டு விட்டதால், திறந்த வெளி புல் வெளிகழகத்தில் அமர்ந்து போதையேற்றி, அங்கேயே மட்டையாகி விடுகின்றனர் சில குடிமகன்கள்..!
அதுவும் குடிகாரர்களின் கொண்டாட்ட தினமான ஞாயிற்றுக் கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் திருவல்லிக்கேணி பகுதி மதுக்கடைகளில் மதுவாங்க இப்போதே கூட்டம் முண்டியடிக்க தொடங்கி விட்டது. குடிமகன்களால் நோய்பரவலை தடுக்க தற்போதே வேப்பிலை மாவிலை தோரணம் கட்ட தொடங்கிவிட்டார் இந்த பழரசக்கடை பெண்மணி..
அரசின் நிதிக்கு ஆதாரமாக இருக்கும் இத்தகைய குடிமகன்கள் தான் கொரோனாவுக்கு கொள்கை பரப்பு செயலாளர்கள் போல ஊர் முழுவதும் பரப்பிவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், விபரீதம் கருதி சென்னையிலும் கோடு போட்டு குடிமகன்களுக்கு குட் டச், பேட் டச்சோடு, இனி டோண்ட் டச் என்றும் பாடம் எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.