ராமநாதபுரம் அருகே இளம்பெண் கொலை வழக்கில் புதிய திருப்பமாக, கணவரே மனைவியை தீர்த்துக்கட்டி விட்டு, நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை நிரூபிக்கும் கள்ளக்காதல் விவகாரம் குறித்து அலசுகிறது, இந்த செய்தித்தொகுப்பு. வெளிநாட்டு வேலை - கை நிறைய சம்பளம் என்றதும் கழுத்தை நீட்டிய இளம்பெண், ஆசை கணவனின் மோசமான கூடா நட்பால், கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன், 3 ஆண்டுகளுக்கு முன், தனலட்சுமி என்ற இளம்பெண்ணை கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு 2 வயதில் அழகான பெண் குழந்தை உள்ளது.
வெளிநாட்டில் சம்பாதித்த பணம் முழுவதையும் அண்ணியிடம் கொடுத்து வந்ததால், முனீஸ்வரன்
மனைவி தனலட்சுமி, குடும்பம் நடத்தவே கஷ்டப்பட வேண்டிய சூழல் உருவானது. மகளிர் சுய உதவிக்குழுவின் உதவியுடன் வீட்டில் ஓலைப்பாய் பின்னி, விற்பனை செய்து அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு, தனலட்சுமி, தனது வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
விடுமுறைக்கு ஊர் திரும்பிய முனீஸ்வரன், அண்ணியிடம் அதிக நெருக்கம் காட்டியதால், குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. எனவே, உறவுக்கு தடையாக இருந்த மனைவி தனலட்சுமியை தீர்த்து கட்ட, முனீஸ்வரன் திட்டம் தீட்டினார்.
மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாமாக முன்வந்து, போலீசில் சரண் அடைந்த முனீஸ்வரன், என்னென்னவோ காரணத்தை சொல்லியபோதும் போலீசார் நம்பவில்லை. வழக்கம் போல், போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மூனிஸ்வரனின் அந்தரங்கங்கள் அனைத்தும் அம்பலத்துக்கு வந்து விட்டன.
தாய் இறந்தது கூட தெரியாமல், பச்சிளம் குழந்தை, பக்கவாட்டில் கைகளை பற்றிக்கொண்டுதூங்கிக்கொண்டிருந்த காட்சி கல்நெஞ்சம் படைத்தவர் உள்ளத்தையும் உலுக்குவதாக இருந்தது.தாய் கல்லறைக்கு செல்ல - தந்தை சிறைக்கு அனுப்பப்பட, யாருடைய ஆதரவும் இல்லாமல் அனாதையாகி விட்டது, இந்த பச்சிளங் குழந்தை.கூடா நட்பு - கேடாய் முடியும் என்பதற்கு, ராமநாதபுரம் முனீஸ்வரன் வாழ்க்கை ஒரு பாடமாக அமைந்துள்ளது