சாகச முயற்சிக்காக அந்தரத்தில் ஊஞ்சலாடுவோர் மத்தியில், அன்றாட வாழ்வாதாரத்துக்காக உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் கூலித் தொழிலாளி ஒருவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம்...
உலகின் பல்வேறு இடங்களில் வானுயரக் கட்டிடங்களில் ஏறியும், அந்தரத்தில் தொங்கியும் சாகசம் காட்டும் நபர்களை நேரிலும், காணொலியிலும் கண்டு அச்சமும், வியப்பும் ஒருசேர அடைந்திருப்போம். ஆனால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்தரத்தில் தொங்கியபடி வண்ணம் பூசும் காட்சியைத் தான் தற்போது காண்கிறோம்.
கட்டிடங்களில் வண்ணம் பூசுவதற்கு ஹைட்ராலிக் லிப்ட், உயரமான இரும்பு ஏணிகள், ஸ்ப்ரேயர் என்று வந்துவிட்ட இன்றைய காலகட்டத்திலும், வாடகைப் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, ஆபத்தை உணராமல் பணியாளரை ஈடுபடுத்திய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தை உணராமல் மனிதர்களை அந்தரத்தில் தொங்கிய படி வேலை வாங்கும் செயல் குறித்து தனியார் வணிகவளாக உரிமையாளரிடம் கேட்ட போது, வண்ணப்பூச்சு மேற்கொள்ளும் பணியை தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாகவும், மனிதர்களை ஈடுபடுத்துவதும், கருவிகளைக் கையாள்வதும் குத்தகை பெற்ற காண்ட்ராக்டரின் விருப்பம் என்று அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்தார்.
கரணம் தப்பினால் மரணம் என்பது ஒருபுறம் இருந்தாலும், தினசரி அந்தரத்தில் தொங்கியபடி வேலை பார்த்தால்தான் தனக்கு கூலி கிடைக்கும் என்று வெள்ளந்தியாக பேசுகிறார் வண்ணம் பூசும் தனசேகர்.
உயரமான இடங்களில் பணியாற்றும் நபர்கள் முறையான பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும், பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும் என்று விதிமுறைகள் பல இருந்தாலும், பணத்துக்காக விபரீதம் அறியாத பாமரர்களும், அதனால் விளையும் ஆபத்தை உணராத காண்ட்ராக்டர்களும் உள்ள வரை இந்நிலை மாறாது என்பதே நிதர்சனமாக உள்ளது.