கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தெளிக்க வேண்டிய கிருமிநாசினிகளை, சுத்தமாக இருந்த ரிப்பன் கட்டிட வளாகத்திலேயே மாநகராட்சி பணியாளர்கள் தெளித்து வீணடித்த சம்பவம் நடந்தேறியுள்ளது ...
இந்த தார்சாலையில் தண்ணீர்போல் வழிந்தோடுவது வேறு ஏதும் இல்லை குடியிருப்பு பகுதிகளில் தெளிப்பதற்கான கிருமிநாசினி நீர்மம் தான்....
பொதுமக்கள் அதிகமாக கூடும் பொதுவெளியில் மட்டுமில்லாமல், சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று கிருமிநாசினிகளை தெளிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இதற்காகவே வார்டுக்கு ஒன்றுக்கு என 200 கிருமிநாசினி தெளிப்பான் மற்றும் பணியாளர்கள் இன்று முதல் பணியைத் துவங்கியுள்ளனர். முன்னதாக ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இதற்கான துவக்க நிகழ்ச்சியில் தான் இந்த அலட்சிய சம்பவம் நிகழ்ந்தேரியது.
மருந்து தெளிப்பான்களை சோதனை செய்வதற்காக பணியாளர் ஒருவர் கிருமிநாசினியை தெளிக்க துவங்க அதனை பின்தொடர்ந்து 200 பணியாளர்களும் சுற்றி சுற்றி ஒரே இடத்திலே தெளித்து அங்கிருந்த அனைவரையும் தெறிக்கவிட்டனர் . அதிலும் குறிப்பாக ஏற்கனவே சுத்தமாக உள்ள ரிப்பன் மாளிகையின் மூலை முடுக்கு, மரங்கள் செடிகள், சுற்றுச்சுவர், தார்ச்சாலை, மணல்பரப்பு என அனைத்திலும் கிருமிநாசியினை போட்டிப்போட்டு தெளித்து வீணடித்து அசத்தினர். ஒருக்கட்டத்தில் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய அதிகாரிகள் ஒலிப்பெருக்கியில் அறிவித்து கட்டுப்படுத்த முயன்றனர்.
சென்னையின் 200 வார்டுகளில் குடியிருப்புகளில் தெளிக்கவேண்டிய கிருமிநாசினியை சிறுஇடத்திலேயே தெளித்து வழிந்தோடிவிட, மாஸ்க் அணியாத அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் மூச்சுவிட சிரமப்பட்டு மூக்கைமூடி தெறித்து ஓடக்கூடிய நிலை ஏற்பட்டது.
நோய்த்தொற்று பரவாமல் பொதுமக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய கிருமிநாசினியை மாநகராட்சி பணியாளர்கள் வீணடித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பொறுப்பை உணர்ந்து வரும்காலத்தில் இதுபோன்ற வீணடிக்கும் செயலைத் தவிர்க்க உரிய நடவடிக்கையை மாநகராட்சி ஆணையர் எடுக்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு...