கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தற்காத்துக்கொள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் நிலைமையின் விபரீதம் அறியாமல் பூட்டு போடப்பட்ட மாநகராட்சி விளையாட்டு மைதானங்களில் சுவரேறி குதித்து கிரிக்கெட் விளையாடி வருகின்றனர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவ தொடங்கிவிட்டது. இதனால் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், விடுமுறை விடப்பட்டதால் சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
பல உலக நாடுகளில் நடக்கவிருந்த சர்வதேச விளையாட்டு போட்டிகள் முதல் உள்ளூர் விளையாட்டுகள் வரை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆனால், சென்னை தியாகராயர் நகரில் உள்ள சோமசுந்தரம் விளையாட்டு திடலில் கும்பலாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடி பொழுதை கழிக்கின்றனர். பள்ளிச் சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு இல்லாமல் விளையாடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் செயல்பட மாநாகராட்சி தடை வித்துள்ளது. ஒவ்வொரு மைதானத்தையும் பூட்டி எச்சரிக்கை அறிவிப்பையும் ஒட்டியுள்ளனர். விடுமுறை அறிவிக்கப்பட்ட அடுத்த 2 வாரங்களும் முக்கியமானவை.
பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தால் தான் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில், பள்ளி சிறுவர்களும், இளைஞர்களும் விளையாட்டு மைதானத்தில் குவிந்துள்ளனர்.
அரசின் பல்வேறு துறைகள் இணைந்து கொரோனா பரவாமல் நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்களின் சுயக்கட்டுபாடு, ஒத்துழைப்பு இல்லாமல் இதை எதிர்கொள்ள முடியாது என சுட்டிகாட்டுகின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.