திருவாரூர் அருகே பயன்படுத்தப்படாத பழைய பிரிட்ஜ் மீது கொசுவத்தி ஏற்றிவைத்து அருகில் படுத்துறங்கிய முதியவர், பிரிட்ஜில் தீப்பற்றி வெடித்து சிதறியதில் உடல்கருகி உயிரிழந்தார்.
நன்னிலம் அடுத்த மணவாளன் பேட்டை பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவரது வீட்டில் பயன்படுத்தப்படாத பழைய பிரிட்ஜை, வீட்டுத் திண்ணையில் துணியால் மூடிவைத்திருந்துள்ளனர். இந்நிலையில் பிரிட்ஜின் மேல் கொசுவத்தி ஏற்றி வைத்து விட்டு, பக்கிரிசாமி திண்ணையில் படுத்துறங்கியுள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் பிரிட்ஜின் மேல் மூடப்பட்டிருந்த துணி தீப்பிடித்ததில், பிரிட்ஜ் முழுவதும் தீ பரவி வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் அருகில் படுத்திருந்த முதியவர் பக்கிரிசாமி உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.